Paristamil Navigation Paristamil advert login

சுந்தர் சி தலைவர் 173 படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் இதுவா ?

சுந்தர் சி  தலைவர் 173 படத்தில் இருந்து  விலகியதற்கான  காரணம் இதுவா ?

15 கார்த்திகை 2025 சனி 16:06 | பார்வைகள் : 185


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தலைவர் 173. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் வைத்து ரஜினி மற்றும் சுந்தர் சி-க்கு மாலை அணிவித்தபடி கமல் போஸ் கொடுத்த புகைப்படங்களும் வெளியாகின. இப்படத்தை 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.

கமல்ஹாசன் தயரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் என்பதால் இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அப்படத்திற்கான ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் தலைவர் 173 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சுந்தர் சி. இருப்பினும் விலகலுக்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை. அவர் எதற்காக விலகினார்? கமல் ரஜினியுடன் ஏதேனும் மோதலா? என பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதனிடையே ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதற்கு, அவர் சொன்ன கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லாதது தான் காரணம் என கூறப்பட்டது. சுந்தர் சி சொன்ன கதையில் ரஜினிகாந்த் பல மாற்றங்களை செய்யச் சொன்னதாகவும், அது பிடிக்காததால் சுந்தர் சி அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது. ரஜினி - கமல் ஆகியோரிடம் சொல்லாமலேயே சுந்தர் சி அறிக்கை வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மெளனம் காத்து வந்த கமல்ஹாசன், இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

அப்போது தலைவர் 173 படத்தை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது : “சுந்தர் சி படத்தில் இருந்து விலகியது குறித்து அவரது கருத்தை அறிக்கையாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை பொருத்தவரை நான் தயாரிப்பாளர். என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அவருக்குப் பிடிக்கும் வரை கதை கேட்டுக்கொண்டே இருப்போம். கதை நன்றாக இருந்தால் புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்புண்டு. நானும் ரஜினியும் நடிக்கும் படத்திற்கான கதையும் தேடிக்கொண்டு தான் இருக்கிறோம்” என பதில் அளித்தார். இதன்மூலம் சுந்தர் சி சொன்ன கதை பிடிக்காததால் தான் அவரை படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்