Paristamil Navigation Paristamil advert login

விஜய் மீதான விமர்சனத்தை தவிர்க்கிறதா தி.மு.க.,?

விஜய் மீதான விமர்சனத்தை தவிர்க்கிறதா தி.மு.க.,?

14 கார்த்திகை 2025 வெள்ளி 09:30 | பார்வைகள் : 137


தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து, த.வெ.க., தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டும், அதற்கு தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் யாரும் பதில் அளிக்காமல் அமைதி காக்கின்றனர்.

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., -- த.வெ.க., இடையே தான் போட்டி என, விஜய் அறிவித்துள்ளார். இதனால், இரு கட்சிகளும் பரஸ்பரம் கடும் விமர்னங்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், விஜய் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'ஆட்சி அதிகாரத்தில் இருந்து, அதிவிரைவில் மக்களால் துாக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் அவதுாறு அரசியல் ஆட்டத்தை துவங்கியுள்ளது.

'கடந்த 1969க்குப் பின் அக்கட்சியினருக்கு, அவதுாறுதான் அரசியல் கொள்கை; லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு.

'இப்படிப்பட்டவர்களுக்கு த.வெ.க., போன்ற கட்சியை கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்' என, கடுமையாக விமர்சித்தார்.

கரூர் துயரச் சம்பவத்திற்கு பின், நடிகர் விஜய்யை தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். சமூக வலைதளங்களில் 'த.வெ.க., தொண்டர்கள் தற்குறிகள்' என, தி.மு.க.,வினர் விமர்சித்தனர்.

ஆனால், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகள் விஜயின், சமீபத்திய அறிக்கைக்குப் பதிலடி கொடுக்க வில்லை. சமூக வலைதளங்களிலும் தி.மு.க., தரப்பில் இயங்குவோர், அடக்கி வாசிக்கின்றனர்.

தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:


கரூர் துயரச் சம்பவத்திற்குப் பின், விஜய் செல்வாக்கு சரியும் என தி.மு.க., தலைமை நினைத்தது. ஆனால், அப்படி இல்லை என, உளவுத்துறை சர்வே வாயிலாக தெரிய வந்துள்ளது. அதோடு, சிறுபான்மை ஓட்டுகள், குறிப்பாக கிறிஸ்துவர்களின் ஓட்டுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம், விஜய்க்கு செல்லவுள்ளது என்ற அச்சம், தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

விஜயை விமர்சித்தால், தி.மு.க.,வில் உள்ள விஜய் ரசிகர்களாக இருக்கும் பெண்களின் ஓட்டுகளையும் இழக்க நேரிடும் என, தலைமை நினைக்கிறது.

விஜயை விமர்சித்தால், தி.மு.க.,வுக்கு பாதிப்பு இருக்கும் என்பதால்தான், அவர் மீதான விமர்சனத்தை குறைத்துக் கொள்ள கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்