Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க.,வினர் சம்பாதித்தது ரூ.50,000 கோடி

தி.மு.க.,வினர் சம்பாதித்தது ரூ.50,000 கோடி

14 கார்த்திகை 2025 வெள்ளி 08:30 | பார்வைகள் : 135


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அளித்த பேட்டி:

எங்களை பொறுத்தவரை, யாரையும் தீவிரமாக எதிர்க்க மாடோம். கொள்கை அளவில் எதிர்க்கிறோமே தவிர, தனிப்பட்ட முறையில் எந்த தாக்குதலும், யார் மீதும் இதுவரை கிடையாது.

எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பது இல்லை. கரூர் சம்பவத்திற்கு பிறகு தான் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

சட்டசபையில் த.வெ.க.,வை ஆதரித்தும் பேசவில்லை; எதிர்த்தும் பேசவில்லை. அதனால், த.வெ.க.,விற்கு பா.ஜ., ஆதரவு தருகிறது என கூற முடியாது.

ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அதனால், ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். தி.மு.க., ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், துாய்மை பணியாளர்கள் என யாரும் நிம்மதியாக இல்லை.

எல்லா தரப்பினரும் போராடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், தி.மு.க.,வினர் எல்லோரிடமும் வெறுப்பை சம்பாதித்த கையோடு, 50,000 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தையும் சம்பாதித்துள்ளனர். அதை வைத்து, வெற்று விளம்பரம் செய்து வருகின்றனர்.

ஒரு கவுன்சிலர் கூட இல்லாத த.வெ.க., ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா கூறியிருக்கிறார்.

பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறார். பணத்தை வைத்து கூட்டம் கூட்டலாம்; ஆனால், ஆட்சிக்கு வர முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாகேந்திரன் அறிக்கை: சில தினங்களுக்கு முன், தமிழகத்தில் இருந்து, அண்டை மாநிலங்களான, கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு இயக்கப்பட்ட, 100க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பஸ்களுக்கு, இரு மாநில அரசுகளும், கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்துள்ளன.

இதை எதிர்த்து, தமிழக தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள், கடந்த 9ம் தேதி மாலை முதல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நான்கு நாட்கள் கடந்தும், தி.மு.க., அரசு இவ்விவகாரத்தில் தீர்வு காணாததால், தனியார் பஸ் ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு, மற்ற மாநிலங்களுக்கு பயணம் செய்யும், தமிழக மக்களின் போக்குவரத்தும் பெரிதளவில் முடங்கி உள்ளது.

தி.மு.க., அரசுக்கு, தமிழக மக்களின் நலனுக்காக, கேரளா, கர்நாடக அரசுகளிடம் பேச்சு நடத்துவதில் என்ன சிக்கல் என்பது தான் புரியவில்லை.

முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு, மக்களின் அன்றாட போக்குவரத்து வசதிகளை சீராக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்