Paristamil Navigation Paristamil advert login

டில்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது பயங்கரவாதி உமர் தான்: டிஎன்ஏ சோதனையில் பகீர்

டில்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது பயங்கரவாதி உமர் தான்: டிஎன்ஏ சோதனையில் பகீர்

13 கார்த்திகை 2025 வியாழன் 13:34 | பார்வைகள் : 133


டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதிலை கைது செய்தபோது, அவர்கள் மிகப் பெரிய தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. காஷ்மீர், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் இருந்து, 2900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் டாக்டர் ஆதில் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முஸாம்மில் அகமதை, உத்தர பிரதேசத்தின் ஷஹரன்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மேலும், இரு டாக்டர்களுடன் தொடர்பில் இருந்த லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீதும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூவரும், ஹரியானாவின் அல் பலாஹ் மருத்துவ பல்கலையில் பணியாற்றியவர்கள் என தெரிந்தது.

இதே பல்கலையைச் சேர்ந்த நான்காவது டாக்டர் உமருக்கும் இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து, அவரை போலீசார் தேடி வந்த நிலையில், டில்லியில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று அவர் வெடிக்க வைத்தார்.

இதில், 13 பேர் உயிரிழந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பயங்கரவாத தாக்குதல் தான் என்பதை மத்திய அரசு உறுதி செய்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 கார் மற்றும் அதனை ஓட்டி சென்று தாக்குதல் நடத்தியது ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் உமர் என்று சந்தேகிக்கப்பட்டது.

அந்த கார் பலருக்கும் கைமாறி இருந்தாலும் கடைசியாக உமர் தான் வாங்கி இருந்தான். அவன் இறந்ததால் அதனை உறுதி செய்ய காரில் சிதறி கிடந்த உடல் பாகங்களை சேகரித்து டிஎன்ஏ மாதிரி மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் உமரின் குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த 2 டிஎன்ஏவும் தற்போது ஒத்துப்போய் உள்ளது.

உமரின் டிஎன்ஏ மாதிரி அவரது தாய் மற்றும் சகோதரரின் டிஎன்ஏவுடன் 100 சதவீதம் பொருந்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் டில்லி கார் வெடிப்பை நிகழ்த்தியது உமர் தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும், வெடிப்புக்குப் பிறகு திங்கள்கிழமை இரவு உமரின் தாயார் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்