Paristamil Navigation Paristamil advert login

சொன்ன விஷயங்களை விரைவாக செய்யுங்க : பா.ஜ., தலைமைக்கு இபிஎஸ் நெருக்கடி

சொன்ன விஷயங்களை விரைவாக செய்யுங்க : பா.ஜ., தலைமைக்கு இபிஎஸ் நெருக்கடி

10 கார்த்திகை 2025 திங்கள் 13:26 | பார்வைகள் : 107


கூட்டணி அமைத்தபோது உறுதி அளித்ததை செய்யாததால், பா.ஜ., தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, விரைவில் அதை செய்யுமாறு நெருக்கடி கொடுக்கிறார்.

எனவே, பீஹார் தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் முழு கவனம் செலுத்துவதாக, பா.ஜ., தரப்பில் உறுதி அளித்துள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய அ.தி.மு.க., தனி கூட்டணி அமைத்து, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டது. இதனால், பா.ஜ.,வும் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுடன் தனியாக கூட்டணி அமைத்தது. ஆனால், இரு அணிகளும் படுதோல்வியடைந்தன.

வாக்குறுதிகள் தி.மு.க., கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியதால், லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனது. இதையடுத்து, கடந்த ஏப்ரலில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரு நாட்கள் சென்னையில் தங்கியிருந்து, அ.தி.மு.க., - -பா.ஜ., இடையிலான கூட்டணியை மீண்டும் புதுப்பித்தார்.

அப்போது நடந்த பேச்சில், பல வாக்குறுதிகள் பா.ஜ., தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டன. அவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என, பா.ஜ., தலைமை மீது அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் வருத்தத்தில் இருக்கிறார்.

இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் வலுவாக இருக்கும் தி.மு.க., கூட்டணியில் சேதம் ஏற்பட்டு, எதிரணி பலமாக அமைந்தால் மட்டுமே, தி.மு.க., கூட்டணியை வீழ்த்த முடியும். எனவே, மீண்டும் பா.ஜ., கூட்டணியில் இணையும் முன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

அப்போது, 'தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் மேல்மட்ட நிர்வாகிகள், வகை தொகையின்றி கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் மீது, அ.தி.மு.க., மற்றும் சமூக ஆர்வலர்கள் திரட்டி வைத்துள்ள ஆவணங்களை கொண்டு, விரைவாக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனால், தொண்டர்கள் வரை நிலை குலைந்து, தேர்தலுக்கு தி.மு.க.,வினரால் முழு வேகத்தில் பணியாற்ற முடியாத சூழல் ஏற்படும்.

'அரசு டெண்டர்கள், பணி நியமனம் உள்ளிட்டவை வாயிலாக குவித்து வைத்திருக்கும் பணத்தைக் கொட்டி, வாக்காளர்களை விலைக்கு வாங்க, பல இடங்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

'வருமான வரி ரெய்டு நடத்தி, அந்த பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும். தேவையான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.

அப்படி செய்யாவிட்டால், எவ்வித இடைஞ் சலும் இல்லாமல், சுதந்திரமாக தி.மு.க.,வினர் தேர்தல் வேலைகளை கவனிப்பர்.

இப்போதே, 50 சதவீத தேர்தல் வேலைகளை முடித்து, தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு கடிவாளம் போடாமல், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால், தி.மு.க., கூட்டணியை வீழ்த்த முடியாது' என, பா.ஜ., தரப்பிடம் பழனிசாமி தெளிவாக கூறி விட்டார்.

நெருக்கடி இதையடுத்து, 'வரும் மாதங்களிலேயே தி.மு.க., மீதான அதிரடி நடவடிக்கைகள் துவங்கும். இடைவெளியின்றி தி.மு.க., தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகளை நோக்கி, மத்திய அரசு ஏஜன்சிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். நீங்கள் பிரசாரப் பணிகளை துவங்கி, தி.மு.க., அரசை விமர்சிப்பதோடு, கூட்டணிக்குள் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்' என அமித் ஷாவும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவும் கூறியிருந்தனர்.

அந்த அடிப்படையிலேயே தொகுதி வாரியாக மக்களை சந்தித்து, தி.மு.க., செயல்பாடுகளை பழனிசாமி விமர்சித்து வருகிறார். ஆனால், பா.ஜ., தரப்பிலிருந்து வேகமான தேர்தல் பணி எதுவும் இல்லை. மாநில தலைவர் நாகேந்திரன் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்

இந்நிலையில், பா.ஜ., மீதான தன் வருத்தங்களை, அமித் ஷா, நட்டா ஆகியோருக்கு கொண்டு சென்ற பழனிசாமி, பா.ஜ., தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இதையடுத்து, 'பீஹார் தேர்தல் முடிந்ததும், அதே வேகத்தில் மத்திய பா.ஜ., தலைவர்கள் தமிழகம் வந்து, தி.மு.க.,வுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவர். தி.மு.க., அரசு மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் தவறுகள் மீது, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

'விரைவில், மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழகம் வந்து, பழனிசாமியுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடுவர்' என பா.ஜ., தலைமையிடம் இருந்து அ.தி.மு.க.,வுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அ.தி.மு.க,வில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின
 

வர்த்தக‌ விளம்பரங்கள்