Paristamil Navigation Paristamil advert login

பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்... டிச., 1 முதல்!: டிச.,19 வரை நடக்கும் என அறிவிப்பு

பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்... டிச., 1 முதல்!: டிச.,19 வரை நடக்கும் என அறிவிப்பு

9 கார்த்திகை 2025 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 120


பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிச., 1ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வார விடுமுறையை கழித்தால் வெறும் 15 நாட்களுக்கு மட்டுமே கூட்டத்தொடர் நடத்தப்படவுள்ளதால், எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் துவங்கி இருக்கிறது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த சூழலில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிச., 1ம் தேதி துவங்கி, 19 வரை நடக்கும் என, பார்லி., விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்து உள்ளார்.

ஜனாதிபதி ஒப்புதல்


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

பார்லி., குளிர்கால கூட்டத்தொடரை, டிச., 1 முதல் டிச., 19ம் தேதி வரை நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதோடு, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் விதத்தில் ஆக்கப்பூர்வமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இந்த கூட்டத்தொடரை எதிர்நோக்குகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடரின் போது, 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரம், கிரிமினல் வழக்குகளில் சிக்கினால் பிரதமர், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோரின் பதவியை பறிக்கும் மசோதா, பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

இதனால், பெரும்பாலான நாட்கள் பார்லி.,யின் இரு சபைகளும் ஸ்தம்பித்தன. மொத்தமாக, 120 மணி நேரம் விவாதம் நடக்க வேண்டிய லோக்சபாவில், 37 மணி நேரம் மட்டுமே முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

ராஜ்யசபாவிலும் வெறும் 41 மணி நேரம் மட்டுமே விவாதங்கள் நடந்தன. அந்த கூட்டத்தொடரில் இரு சபைகளிலும், 15 மசோதாக்கள் மட்டுமே நிறைவேறின.

வெடிக்கலாம்


தற்போது பீஹார் தேர்தல் முடிந்த பின், குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவுள்ளதால், அதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, வரும் டிச., 4ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

பீஹாரை போல, மற்ற மாநிலங்களிலும் வாக்காளர்கள் நீக்கப்பட்டால், அந்த விவகாரத்தையும் எதிர்க்கட்சிகள் பெரிதாக எழுப்பும். ராகுல் கிளப்பி வரும் ஓட்டு திருட்டு விவகாரமும், குளிர்கால கூட்டத்தொடரில் பெரிதாக வெடிக்கலாம்.

போதாக்குறைக்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடக்கவுள்ளதால், முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா? ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்குமா என்ற சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்