Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., உட்கட்சி பூசலுக்கு உடனடி தீர்வு: மண்டல பொறுப்பாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

தி.மு.க., உட்கட்சி பூசலுக்கு உடனடி தீர்வு: மண்டல பொறுப்பாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

9 கார்த்திகை 2025 ஞாயிறு 06:12 | பார்வைகள் : 134


உட்கட்சி பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண மண்டல பொறுப்பாளர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளார்.

தி.மு.க.,வில், 76 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். இவர்களை தவிர, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்களும், 234 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், தமிழகத்தை எட்டு மண்டலங்களாக பிரித்து, மண்டல பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கு, லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்களும் சட்டசபை தொகுதிவாரியாக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மாவட்டச் செயலர், ஒரு பொறுப்பு அமைச்சர், ஒரு தொகுதி பொறுப்பாளர், ஒரு மண்டலப் பொறுப்பாளர், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் என, தேர்தல் பணிகளை கவனிக்கும் நிர்வாகிகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தவிர்த்து, தொகுதிவாரியாக உள்ள குறைகளை களையவும், நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், 'உடன்பிறப்பே வா' என்ற பெயரில், கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.

அப்போது தொகுதி நிலவரம் குறித்தும், உட்கட்சி பூசல்கள், மாவட்டச் செயலர், பொறுப்பாளர்கள் மோதல் குறித்தும், முதல்வர் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல, உட்கட்சி மோதல் விவகாரமும், முதல்வரின் கவனத்திற்கு வரும்பட்சத்தில், இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்வதுடன், அவர்களை எச்சரித்தும் அனுப்பி வைக்கிறார்.

மாவட்டச் செயலர்களுக்கும், பொறுப்பு அமைச்சர்களுக்கும் சில மண்டலங்களில் ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ள தகவல்கள், அறிவாலயத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன் விபரம்:

ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான கோஷ்டி பூசல் பிரச்னையை, மாவட்டச் செயலரும், பொறுப்பாளரும் தீர்த்து வைக்க வேண்டும்.

அவர்களால் முடியாத பட்சத்தில், மண்டல பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

மண்டல பொறுப்பாளர்களால் தீர்வு காண முடியாத பிரச்னைகளை தான், மாநில தலைமைக்கு எடுத்து வர வேண்டும்.

எனவே, எட்டு மண்டலங்களின் பொறுப்பாளர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குறைகளையும், புகார் தொடர்பான பிரச்னைகளையும் தொடர்ந்து கண்காணித்து, அதற்கு தீர்வு காண வேண்டும். அந்த விபரத்தை அறிக்கையாக, அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது

வர்த்தக‌ விளம்பரங்கள்