Paristamil Navigation Paristamil advert login

இந்தியா ஹாட்ரிக் தோல்வி - தொடரில் இருந்து வெளியேற்றம்

 இந்தியா ஹாட்ரிக் தோல்வி - தொடரில் இருந்து வெளியேற்றம்

8 கார்த்திகை 2025 சனி 12:14 | பார்வைகள் : 120


ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணி ஹாட்ரிக் தோல்வியடைந்துள்ளதால் தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

ஹாங்காங் சிக்ஸஸ்(Hong Kong Sixes) 2025 தொடர் நேற்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது.

நேற்று இந்தியா தனது முதல் லீக் போட்டியில், பாகிஸ்தானை எதிர்கொண்டது.

மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதால், DLS விதிப்படி இந்தியா 2 ஓட்டங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, 2வது லீக் போட்டியில் குவைத்தை எதிர்கொண்டது இந்தியா. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய குவைத், நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில், 106 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் யாஷின் படேல், 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 58 ஓட்டங்கள் விளாசினார்.

107 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 79 ஓட்டங்கள் மட்டுமே குவித்து 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அடுத்ததாக குரூப் சுற்றில் மூன்றாம் இடம் பிடித்த அணிகளுக்கான பவுல் சுற்றில், ஐக்கிய அரபு அமீரக அணியுடன் இந்தியா மோதியது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்ட ஆடிய இந்திய அணி, 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிமன்யூ மிதுன் 50 ஓட்டங்களும், அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் 42 ஓட்டங்களும் குவித்தனர்.

107 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, 5.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்த போட்டியில், இந்தியா நேபாளத்தை எதிர்கொண்டது. நாணய சுழற்சியில் வென்ற நேபாள அணி முதலில் துடுப்பாட்டம் ஆடியது.

நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் நேபாள அணி, விக்கெட் இழப்பின்றி 137 ஓட்டங்கள் எடுத்தது.

138 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 3 ஓவர்களில் வெறும் 45 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் நேபாள அணி, 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.  

தினேஷ் கார்த்திக், உத்தப்பா போன்ற அனுபவ வீரர்கள் இருந்தும், 3 சிறிய அணிகளிடம் இந்தியா ஹாட்ரிக் தோல்வியடைந்தது ரசிகர்ளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதன் மூலம், ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

இந்தியா நாளை நடைபெற உள்ள போட்டியில், இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் இந்தியா வெற்றி பெற்றாலும், புள்ளிகளின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்