அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்குமாறு என்னை களம் இறக்கியது பா.ஜ., தான்: செங்கோட்டையன்
8 கார்த்திகை 2025 சனி 13:39 | பார்வைகள் : 130
என்னை டில்லிக்கு அழைத்து, அ.தி.மு.க .,வை ஒருங்கிணைக்க சொன்னது பா.ஜ., தான்,'' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்குமாறு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 'கெடு' விதித்திருந்தார். மேலும், டில்லி சென்று பா.ஜ., மூத்த தலைவர்களையும் சந்தித்தார்.
பின்னர், சசிகலா, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோரை சந்தித்ததால், அ.தி.மு.க.,வில் இருந்து அவரை நீக்கி, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டார்.
நம்பிக்கையானவர் இந்நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில், நேற்று செங்கோட்டையன், அளித்த பேட்டி:
ஜெயலலிதா இருந்தபோதும், மறைவுக்குப் பின்பும் மூன்று முறை பன்னீர்செல்வமே முதல்வராக்கப்பட்டார். தகுதி உள்ளவர் என்றால், பழனிசாமி ஏன் முதல்வர் ஆக்கப்படவில்லை? அந்தளவுக்கு நம்பிக்கையானவர் பழனிசாமி.
அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என குரல் எழுப்பிய என்னை, கட்சியில் இருந்து நீக்கிஉள்ளார் பழனிசாமி.
என்னையெல்லாம் கட்சியில் இருந்து நீக்கும் பழனிசாமியை ஜெயலலிதா நீக்கினார். கடந்த 2012ல் ஜெயலலிதா என்னையும் நீக்கினார்.
அ.தி.மு.க.,வில் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் ஜெயலலிதா. இப்போது அந்த நிலை இல்லை. இது கட்சியை பலவீனப்படுத்தும்.
என்னை டில்லிக்கு அழைத்தது பா.ஜ., தான். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க சொன்னதும், பா.ஜ.,தான். நானும் அதைத்தான் சொன்னேன். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கவும், ஆட்சியை பிடிக்கவும் உதவ வேண்டும் என, பா.ஜ., தலைமையிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி வீட்டு பணியாளரின் பிரச்னைக்காக, தமிழகம் முழுதும் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தி, சி.பி.ஐ., விசாரணை கோரியது.
ஆனால், ஜெயலலிதா வாழ்ந்த, கோடநாடு இல்லத்தில் நடந்த கொலையில், சி.பி.ஐ., விசாரணை கேட்கவில்லை. இதற்கான காரணத்தை, பழனிசாமியிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
கொச்சைப்படுத்தியவர் என்னை அமைச்சராக்கியதாக பழனிசாமி கூறுகிறார். ஆனால், என்னைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால், அவர் முதல்வராகி இருக்க முடியாது. கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் பழனிசாமி. தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கொச்சைப் படுத்தியவர்.
'கோபி தொகுதியில், 45 ஆண்டுகள் சிற்றரசர் போல வாழ்ந்தார். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை' என, என் மீது பழனிசாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
'ஆனால், 'எடப்பாடியில் இல்லாத அளவுக்கு, கோபியில் சாலைகள் சிறப்பாக அமைத்துள்ளீர்கள்' என, அவரே என்னை பாராட்டியுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில், கட்சிக்காக உழைத்தவர்களை மறந்து விட்டு, வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள், பணக்காரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் பழனிசாமி.
நாமக்கல் பிரசாரத்தில் பேசிய பழனிசாமி, 'கொடி பறக்குது. பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது' என்றார். ஆனால், த.வெ.க., பொதுக்குழுவில் விஜய் என்ன பேசினார் என்பதை, அனைவரும் அறிவோம்.
ஒற்றுமை உணர்வுடன் வலிமையாக இருந்தால், நம்மை தேடி மற்றவர் வருவர். ஒருவர் முன்னேற வேண்டுமானால், தன் காலில் நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக் கூடாது. அப்படி செய்தால், இந்த நிலைதான் ஏற்படும்.
பழனிசாமியின் மகன், மருமகன், மைத்துனர் ஆகியோர் தான் கட்சியை நடத்துகின்றனர். அவரது அக்கா மகன் தான் எல்லாம். கட்சிக்காக உழைத்தவர்கள், அவர்களிடம் மண்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan