Paristamil Navigation Paristamil advert login

அரசியல் கூட்டங்களில் நெரிசலை தவிர்க்க... வருகிறது தீர்வு

அரசியல் கூட்டங்களில் நெரிசலை தவிர்க்க... வருகிறது தீர்வு

7 கார்த்திகை 2025 வெள்ளி 09:21 | பார்வைகள் : 145


அரசியல் நிகழ்ச்சிகளுக்கு கட்சிகள் இனி வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. கட்சிகளின் பிரசார கூட்டங்கள், பேரணி ஆகியவற்றுக்கு பொதுவான வழிகாட்டு நெறிகளை வகுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் த.வெ.க. வழக்கு தொடர்ந்தது. கரூர் நெரிசல் சம்பவத்துக்கு பின் மேலும் சில வழக்குகள் தொடரப்பட்டன.

அவற்றை விசாரித்த ஐகோர்ட், 10 நாட்களுக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அடுத்த விசாரணை 11ம் தேதி நடக்கிறது. அதற்குள் விதிகளை வகுக்க சர்வகட்சி கூட்டத்துக்கு அரசு ஏற்பாடு செய்தது. அமைச்சர்கள் நேரு, ரகுபதி, சுப்பிரமணியன், தலைமை செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், பொறுப்பு டி.ஜி.பி. வெங்கடராமன் ஆகியோர், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., கொ.ம.தே.க., நாம் தமிழர், தே.மு.தி.க. உள்ளிட்ட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அவசரகால வசதி

கூட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், கூட்டம் நடத்தும் இடம், நேரம், வழித்தடம், மேடை உள்ளிட்ட கட்டுமானங்களின் உறுதி, பாதுகாப்பு, மருத்துவம், அவசர கால வசதிகள் ஆகியவை பற்றி விதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விதிகளை மீறுவது, சேதம் ஏற்படுத்துவது போன்றவை நடந்தால், அதை ஈடு செய்வதற்காக 1 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கட்சிகளிடம் வைப்புத்தொகை வசூலிக்கலாம் என அரசு தரப்பு பரிந்துரைத்தது. பெரும்பாலான கட்சிகள் அந்த பரிந்துரையை ஏற்கவில்லை. தங்கள் கருத்தை எழுத்து வடிவில் 10ம் தேதிக்குள் அனுப்புமாறு அரசு கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் ஐகோர்ட்டில் மறுநாள் அரசு அறிக்கை தாக்கல் செய்யும்.

கூட்டம் முடிந்தபின், கட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:

தி.மு.க. பாரதி: எந்த நிபந்தனை விதித்தாலும், அது அடிப்படை உரிமைகளை மீறாமல் இருக்க வேண்டும் என தி.மு.க. தரப்பில் எடுத்துரைத்தோம்.

அ.தி.மு.க. ஜெயகுமார்: அனைத்து கட்சி கூட்டம் என்றால், முதல்வர் தலைமை வகிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், ஸ்டாலின் வரவில்லை. கூட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்றால் கோர்ட்டுக்கு தான் போக வேண்டும் என்ற நிலை உள்ளது. எந்த விதி வகுத்தாலும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்: 24 பக்க அறிக்கையை அரசு கொடுத்தது. ஜனநாயக உரிமைகளை பறிப்பதாக இருந்ததால், அதை நாங்கள் ஏற்கவில்லை. எந்த மாநிலத்திலும் இப்படி கட்டுப்பாடுகள் இல்லை. ஐகோர்ட் உத்தரவை ஏற்க இயலாது என, அரசு கூற வேண்டும். மீறி உத்தரவு போட்டால், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும்.

கூட்டத்தில் பங்கேற்காத பா.ம.க. அன்புமணி: பொதுக்கூட்டம், பேரணி நடத்துவது, அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை. பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை. டிபாசிட் கட்டாயமானால், ஆட்சியில் இருந்து கொள்ளையடித்த கட்சிகள் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த முடியும். இது, அரசியலை வணிகமயமாக்கி, ஜனநாயகத்துக்கே ஆபத்தாக முடியும்.

இவ்வாறு தலைவர்கள் கூறினர். 'அன்புமணிக்கு அழைப்பு விடுக்காதது பா.ம.க.வை அவமதிக்கும் செயல்' என, கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு பேட்டி அளித்தார். 'பா.ம.க. பெயரில் கலந்து கொண்ட முரளிசங்கர், கோபு ஆகியோருக்கும் பா.ம.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. இது எங்களை அவமதிக்கும் செயல்' என கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்