ஓ.பி.எஸ்.,சின்...கூடாரம் காலி! மனோஜ் பாண்டியனும் மாறினார் தி.மு.க.,வுக்கு!
5 கார்த்திகை 2025 புதன் 04:11 | பார்வைகள் : 149
ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகிச் சென்று கொண்டிருப்பதால், தர்மயுத்தம் நடத்திய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூடாரம் காலியாகி உள்ளது. அவருடன் ஒட்டிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியனும் நேற்று தி.மு.க.,வில் இணைந்தார். கடந்த 2001ல் பெரியகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, முதல் முறையாக சட்ட ச பைக்குள் நுழைந்த பன்னீர் செல்வத்திற்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்ற போது, 2001 செப்டம்பரில் பன்னீர்செல்வம் முதல்வராகி, தமிழகத்தையும் தாண்டி, ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஒருங்கிணைப்பாளர்
ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற பன்னீர்செல்வத்திற்கு, 2014 செப்டம்பரில் மீண்டும் முதல்வர் பதவி கிடைத்தது. 2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைந்த போதும் முதல்வரானார்.
ஆனாலும், அவரால் மு தல்வர் பதவியையும், அ.தி.மு.க.,வையும் தன் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. சசிகலா ஆதரவுடன் முதல்வரான பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆதரவுடன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தார்.
அப்போது, துணை முதல்வர் மற்றும் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பதவி பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது. 2021 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.,வை பழனிசாமி தன் வசப்படுத்தினார்.
இதனால், கட்சியில்இருந்து வெளியேற்றப்பட்ட பன்னீர்செல்வம் பின்னால், அவருக்கு துணையாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, செம்மலை, மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் வரவில்லை.
அதன்பின், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை துவக்கி, பழனிசாமி தலைமைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் பன்னீர்செல்வம்.
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன், ராஜ்யசபா எம்.பி., தர்மர், முன்னாள் எம்.எல்.ஏ., - ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.
கடந்த, 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் பன்னீர்செல்வம் போட்டியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜே.சி.டி.பிரபாகரன், அவரது அணியில் இருந்து விலகினார். அடுத்து அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், அவரிடமிருந்து விலகி தி.மு.க.,வுக்கு தாவினார்.
இந்நிலையில், பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்களில் நடத்த உதவி வந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ.,வும், மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனுமான மனோஜ் பாண்டியன் நேற்று தி.மு.க.,வில் இணைந்தார். இது, பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஸ்டாலின் உறுதி
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், எப்படியாவது வென்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
அதற்காக எதற்கும் தயாராக உள்ள ஸ்டாலின், அ.தி.மு.க.,வினரை தி.மு.க.,வில் சேர்த்து வருகிறார். அந்த வரிசையில் கடந்த தேர்தலில், ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற வைத்திலிங்கத்தையும், தி.மு.க.,வில் சேர்க்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.
அப்படி நடந்தால், பன்னீர்செல்வம் தனித்து விடப்படுவதுடன், அவரது ஒட்டு மொத்த கூடாரமும் காலியாகி விடும். அவரது அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.
இது தொடர்பாக, பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:
அ.தி.மு.க., அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பா.ஜ., தலைமை உதவும் என்று பன்னீர்செல்வம் நம்பினார். அந்த நம்பிக்கை பொய்த்ததால், அவரை நம்பி இருந்தவர்களும் நம்பிக்கை இழந்து வெளியேற துவங்கி உள்ளனர்.
அ.தி.மு.க.,வுக்குள் செங்கோட்டையன் எழுப்பிய கலகக்குரல், பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்; அதன் வாயிலாக அ.தி.மு.க.,வுக்குள் மீண்டும் ஐக்கியமாகி விடலாம் என்றும் பன்னீர் நினைத்தார்.
ஆனால், செங்கோட்டையனை கட்சியிலிருந்தே நீக்கி பழனிசாமி காட்டிய அதிரடியால், பன்னீர்செல்வம் உடனிருந்தோர், 'இனி கட்சி ஒருங்கிணைய வாய்ப்பே இல்லை' என முடிவெடுத்து, அவரை விட்டு விலக துவங்கி உள்ளனர். இது, அவரது அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவே.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan