Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சிறப்பு வாக்காளர் பட்டியல் குறித்து பயம் வேண்டாம்: தேர்தல் ஆணையம் பதில்

சிறப்பு வாக்காளர் பட்டியல் குறித்து பயம் வேண்டாம்: தேர்தல் ஆணையம் பதில்

4 கார்த்திகை 2025 செவ்வாய் 07:02 | பார்வைகள் : 2066


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து பயம் வேண்டாம்; அனாவசியமாக யார் பெயரும் நீக்கப்படாது. எதிர்பார்த்ததை விட சிறப்பாக திருத்தப் பணி மேற்கொள்ளப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் உறுதி அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., - பி.சத்தியநாராயணன் தாக்கல் செய்த மனு:

தி.நகர் சட்டசபை தொகுதியில், 1998ம் ஆண்டு, 2 லட்சத்து 8,349 வாக்காளர்கள் இருந்தனர். 2021ல் வெறும் 36,656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்து உள்ளனர்.

அதாவது, 17.6 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. மக்கள்தொகைக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

13,000 பேர் நீக்கம்


தி.நகர் தொகுதியில் அ.தி.மு.க., ஆதரவாளர்கள் 13,000 பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேநேரம், இறந்தவர்களின் பெயர்கள் இதுவரை நீக்கப்படவில்லை.

இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய, 2026 சட்டசபை தேர்தலுக்கு முன், தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரிபார்த்து, தவறான சேர்க்கை மற்றும் நீக்கத்தை களைய வேண்டும்.

இப்பணிகளை விரைவாக முடித்து, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

அதேபோல, தாம்பரம் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என, அ.தி.மு.க., வழக்கறிஞர் விநாயகமும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் கூறியதாவது:

ஆண்டுதோறும் ஜனவரி மாதமும், ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடத்தப்படும்.

தற்போது தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்வது தொடர்பாக, அக்., 27ல் தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் துவங்க உள்ளன.

இப்பணிகளில் வாக்காளர் பட்டியல் முழுமையாக மாற்றியமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை சரிபார்த்து, டிசம்பர் மாதம் 9ம் தேதி, சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அப்போது, வரைவு பட்டியலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம். அதை முழுமையாக பரிசீலித்த பின், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

சிறப்பாக நடக்கும்


மேலும், 1950ம் ஆண்டுக்கு பின், 10 முறை சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்துள்ளன. தமிழகத்தில் 2005ம் ஆண்டை தொடர்ந்து, 20 ஆண்டு களுக்கு பின், சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து, யாரும் பயப்பட தேவையில்லை; அனாவசியமாக யார் பெயரும் நீக்கப்படாது.

இப்பணிகள், எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்யப்படும். அனைத்து பணிகளும் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும்.

இவ்வாறு அவர் வாதாடினார்.

இதேபோல, கரூர் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்கக்கோரி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாக, தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார்.

இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும், வரும் 13ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்