Paristamil Navigation Paristamil advert login

விஜய், அண்ணாமலை டிடிவி. டெல்லி போடும் பயங்கர பிளான்.. அமித் ஷாவின் சாணக்கிய கணக்கு!

விஜய், அண்ணாமலை டிடிவி. டெல்லி போடும் பயங்கர பிளான்.. அமித் ஷாவின் சாணக்கிய கணக்கு!

3 கார்த்திகை 2025 திங்கள் 06:55 | பார்வைகள் : 221


தமிழக வெற்றிக் கழகத்தை வைத்து டெல்லி பாஜக முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
திமுகவிற்கு செல்லும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை அப்படியே புதிய கூட்டணி ஒன்றிற்கு கொண்டு செல்லும் வகையில் பாஜக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.


பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டிற்கு என்று சிறப்பு பிளான் ஒன்றை களமிறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சாதாரணமாக கூட்டணிகளை அமைக்காமல்.. புதிய ரூட் ஒன்றை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யையும், சில முக்கிய தலைவர்களையும் உள்ளடக்கி ஒரு பெரிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்க்கு என்று தனி திட்டம்
இந்த திட்டத்தின்படி விஜய் நேரடியாக பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார். விஜய் நேரடியாக பாஜக - அதிமுக கூட்டணியில் இணைய மாட்டார். விஜய் நேரடியாக பாஜகவில் இணைந்தால் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.. முக்கியமாக அவரை மாற்று என்று கருதியவர்களுக்கு சிக்கல் ஏற்படும்.. அதோடு சிறுபான்மையினர், முக்கியமாக கிறிஸ்துவர்கள் வாக்குகள் அவருக்கு கிடைக்காமல் போகும் என்று அவருக்கு தெரியும்.


விஜயை நேரடியாக தங்கள் பக்கம் இழுத்தால், ஆளுங்கட்சியான திமுகவிற்கு சாதகமாகிவிடும் என்பதை பாஜக தலைமையும் உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரணங்களால், ஒரு பெரிய, மறைமுகமான கூட்டணி திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக டெல்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலை - விஜய்
பாஜக மூத்த தலைவர் கே. அண்ணாமலை ஒரு புதிய கட்சியைத் தொடங்கலாம் என்று ஒரு தகவல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. அண்ணாமலையின் புதிய கட்சி, விஜய், டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு அணியை உருவாக்கும் முயற்சிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது..


இந்த திட்டம் வெற்றி பெற்றால், பின்னர் தே.மு.தி.க மற்றும் பா.ம.க-வின் அன்புமணி பிரிவு ஆகியவை இந்த கூட்டணியில் இணையலாம் என்று அந்த அரசியல் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாம். தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, இந்த புதிய கூட்டணியும் அதிமுக-பாஜக கூட்டணியும் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உள்ளன. அதாவது இவர்கள் திமுகவின் வாக்குகளை பிரிப்பார்கள். திமுகவின் வாக்குகளை பிரித்து யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத தொங்கு சட்டசபை உருவாகும்.


அப்போது இந்த புதிய கூட்டணியும் - அதிமுக - பாஜக கூட்டணியும் இணைந்து ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த திட்டத்தை அறிந்தவர் என்றும், ஆனால் அவர் இந்த திட்டத்தை ஆதரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் பெரிய கூட்டணி ஆட்சி அமைத்தால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்காது என்று அவர் நினைக்கிறாராம்.
அரசியல் யூகங்கள்தான்?
இது தொடர்பாக, பாஜக தரப்பிலோ, விஜய்யின் பனையூர் குழுவிடமிருந்தோ, அல்லது அண்ணாமலை தரப்பிடம் இருந்தோ எந்தத் தலைவர்களிடமிருந்தோ இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த கூற்றுக்கள் அனைத்தும் தற்போதைக்கு அரசியல் யூகங்களாகவே இருக்கின்றன. சம்பந்தப்பட்ட தரப்பினரால் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்