Paristamil Navigation Paristamil advert login

கனவான்களின் விளையாட்டா கிரிக்கெட் ? - ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெளிப்பட்டது என்ன ?

கனவான்களின் விளையாட்டா கிரிக்கெட் ? - ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெளிப்பட்டது என்ன ?

29 புரட்டாசி 2025 திங்கள் 12:15 | பார்வைகள் : 120


டுபாயில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி நடைபெற்ற பரபரப்பான ஆசியக் கிண்ண இருபதுக்கு - 20 இறுதிப் போட்டியில், இந்தியா பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 41 ஆண்டு கால ஆசியக் கிண்ண வரலாற்றில் 9 ஆவது முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்றது. நடப்புத் தொடரில் பாகிஸ்தானை இந்தியா மூன்றாவது முறையாக வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது. எனினும், ஆட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற பரிசு வழங்கும் விழாதான் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிக் கொண்டாட்டங்கள் அரசியல் சாயம் பூசப்பட்டு, கசப்பான முடிவை எட்டியுள்ளது.

இந்திய அணி வெற்றி பெற்ற பின்னரும், வெற்றியாளர் கிண்ணம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படுவது தாமதமானதற்குக் காரணம், பரிசளிப்பு விழாவில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாக கூறப்படுகின்போதும், விளையாட்டில் ஏன் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவராகப் பதவி வகிப்பவர் மொஹ்சின் நக்வி. இவர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராகவும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்தில் உள்விவகார அமைச்சராகவும் இருக்கிறார். அரசியல் பதவியில் இருக்கும் மொஹ்சின் நக்வியிடம் இருந்து வெற்றிக் கிண்ணத்தையும் வீரர்களுக்கான பதக்கங்களையும் பெற்றுக்கொள்ள இந்திய கிரிக்கெட் சபையும் (BCCI) அணி நிர்வாகமும் விரும்பவில்லை என்று தெரிவித்தது.

டுபாய் நேரப்படி போட்டி இரவு 10.30 மணிக்கு நிறைவடைந்த போதிலும், இந்தக் குழப்பம் காரணமாகப் பரிசளிப்பு நிகழ்ச்சி நள்ளிரவு வரை தாமதமானது. இந்தச் சூழ்நிலையில், இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அகா ஆகியோரின் செயல்பாடுகள் கிரிக்கெட் உலகின் கண்ணியத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளன.

"நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதில் இருந்து, கடினமாக உழைத்து வெற்றி பெற்ற ஒரு அணிக்கு  கிண்ணம் மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன். இந்தத் தொடரில் என்னுடைய உண்மையான கிண்ணம் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்திருக்கிறார்கள். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களும் தான் இந்தத் தொடரின் உண்மையான வெற்றிக் கிண்ணங்கள். வெளியே கிண்ணம் பறிபோனாலும், அணியின் வெற்றிதான் உண்மையானது." என இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும், "இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எங்களுக்கு யாரும் அறிவுறுத்தவில்லை, மொஹ்சின் நக்வியிடம் இருந்து கிண்ணத்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது ஒரு அணியாக எடுத்த முடிவு" என்றும் சூர்யகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் எப்போதுமே விமர்சிக்கப்பட்டுள்ளோம். கிரிக்கெட் விளையாட்டைப் புரிந்தவர்கள் கிரிக்கெட் பற்றி மட்டுமே பேசுவார்கள். ஏனைய அனைத்தும் இரண்டாம் பட்சம் தான். இந்தத் தொடரில் எங்கள் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்படவில்லை, மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் உள்ளன. நாங்கள் அதைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை. இந்திய அணிவீரர்கள் கை குலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல, அது கிரிக்கெட்டுக்கு அவமரியாதை. கிரிக்கெட்டை அவமதிப்பவர்கள் வேறு இடத்தில் அம்பலப்படுவது நிச்சயம். எந்தவொரு சிறந்த அணியும் அவர்கள் போல் செய்யமாட்டார்கள். ஒரு சிறந்த அணி எங்களைப் போல தனியாகச் சென்று, கிண்ணத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பதக்கங்களைப் பெற்றுக் கொள்வார்கள்." எனத் தெரிவித்த பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அகா, சூர்யகுமார் யாதவ் தொடர் தொடங்குவதற்கு முன்பு தனிப்பட்ட முறையில் தன்னிடம் கைகுலுக்கியதாகவும், ஆனால் கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். வெளியிலிருந்து வந்த உத்தரவின்படி சூர்யகுமார் நடந்துகொண்டார் என்றும் சல்மான் அகா கூறியுள்ளார்.

ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்மாவும், தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மாவும் மொஹ்சின் நக்வியைத் தவிர்த்து, மேடையில் இருந்த ஏனைய விருந்தினர்களிடம் இருந்து தங்கள் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அகா மட்டும் நக்வியிடம் இரண்டாமிடம் இடம்பெற்ற அணிக்கான (runners-up) காசோலையைப் பெற்றுக்கொண்டார். ஆனால் பின்னர் அந்தக் காசோலையை வீசியெறிந்துவிட்டு சென்றார்.

இந்திய அணியின் வெற்றி குறித்த தனது எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி 'ஒப்பரேஷன் சிந்தூர்' பற்றி குறிப்பிட்டுள்ளார். "விளையாட்டு களத்தில் ஒப்பரேஷன் சிந்தூர். ஆனால் முடிவு ஒன்று தான் - இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நமது கிரிக்கெட்வீரர்களுக்கு வாழ்த்துகள்," என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பதிவுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலல் தலைவர் மொஷின் நக்வி பதிலளித்துள்ளார்.


"போர் தான் பெருமைக்கான உங்களின் அளவீடு என்றால் பாகிஸ்தானிடம் இந்தியாவின் அவமானகரமான தோல்வியை வரலாறு பதிவு செய்துள்ளது, அதை எந்த கிரிக்கெட் போட்டியாலும் மாற்ற முடியாது. விளையாட்டிற்குள் போரை இழுப்பது ஏமாற்றமளிக்கிறது மற்றும் விளையாட்டு உத்வேகத்தை அவமதிப்பதாக உள்ளது." எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் வெற்றி பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சிறப்பான வெற்றி. நமது விளையாட்டு வீரர்களின் ஆற்றல் மீண்டும் ஒருமுறை எதிராளிகளை துவம்சம் செய்துவிட்டது. எந்தக் களமாக இருந்தாலும் இந்தியாவின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று." என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு என்பது எப்போதும் 'கனவான்களின் விளையாட்டு' (Gentlemen's Game) என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. ஆனால், ஆசியக் கிண்ணப் போட்டியின் முடிவில் அரங்கேறிய இந்தச் சம்பவங்கள், கிரிக்கெட்டில் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பதையே அப்பட்டமாகக் காட்டுகின்றன. இரண்டு அண்டை நாடுகள் மோதும் போது கிரிக்கெட் உணர்வு மழுங்கடிக்கப்பட்டு, அருவருக்கத்தக்க அரசியல் செயல்பாடு மேலோங்கி நிற்கிறது. குறிப்பாக, கிரிக்கெட்டில் ஆசிய நாடுகள் முன்னேறியதும் கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு என்பது தலைகீழாக மாறி விட்டது என்றே தோன்றுகின்றது.

இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வி நடந்துகொண்ட விதம் குறித்து, நவம்பரில் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தில் முறையிட உள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

தற்போது கிரிக்கெட் விளையாட்டில் காணப்படும் நடத்தைகள், அருவருக்கத்தக்க செயற்பாடுகள் எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் இருந்து இரசிகர்களை ஓரங்கட்டும் அல்லது சலிப்படைய வைக்கும் வகையில் சென்று கொண்டிருக்கின்றது.


சர்ச்சையுடன் ஆரம்பித்த ஆசியக் கிண்ணத்தொடர், எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணப்படாமல், மீண்டும் ஒரு மிகப்பெரிய சர்ச்சையுடனே முடிந்திருக்கிறது. கிரிக்கெட் உலகில் இத்தகைய அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்டு, விளையாட்டு கண்ணியத்துடனும், மரியாதையுடனும் மதிக்கப்பட வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி  virakesari
 

வர்த்தக‌ விளம்பரங்கள்