Paristamil Navigation Paristamil advert login

சி.பி.ஐ., விசாரணை கேட்டு த.வெ.க., வழக்கு; இன்று விசாரணை

சி.பி.ஐ., விசாரணை கேட்டு த.வெ.க., வழக்கு; இன்று விசாரணை

29 புரட்டாசி 2025 திங்கள் 12:05 | பார்வைகள் : 129


கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த சம்பவம் குறித்து, சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் விசாரணை, இன்று பிற்பகல் 2:15 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற உள்ளது.

அதிர்ச்சி கரூரில் நேற்று முன்தினம், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்தனர். இந்த சம்பவம், நாடு முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் திட்டமிட்ட சதி என த.வெ.க., தரப்பில் குற்றஞ்சாட்டிய நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அறிவழகன் தலைமையிலான வழக்கறிஞர்கள் அணியினர், சென்னை ஆர்.ஏ.புரத்தில், பசுமை வழி சாலையில் வசிக்கும் நீதிபதி எம்.தண்டபாணியிடம் முறையீடு செய்ய, நேற்று காலை அவரது வீட்டுக்கு சென்றனர்.

நீதிபதியை நேரில் சந்தித்த வழக்கறிஞர் அறிவழகன், கரூரில் நடந்த சம்பவம் விபத்து போல தெரியவில்லை; திட்டமிட்ட அரசியல் சதி போலவே தெரிகிறது.

பிரசாரத்தின் போது கற்கள் வீசப்பட்டன; போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். எனவே, இச்சம்பவம் குறித்து, சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவும், 'சிசிடிவி' காட்சிகளை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்.

சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.

இதை கேட்ட நீதிபதி, 'நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. உயிர் இழப்புக்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன். சம்பவம் நடந்த இடமான கரூர், மதுரை உயர் நீதிமன்ற கிளை எல்லைக்குள் இருப்பதால், இது தொடர்பாக, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யுங்கள்.

வழக்கு இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றார்.

விசாரணை இதை தொடர்ந்து, அங்கிருந்து வழக்கறிஞர்கள் புறப்பட்டு சென்றனர்.

நீதிபதியின் அறிவுறுத்தலை ஏற்று, த.வெ.க., சார்பில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில், இன்று காலை முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இம்மனு, நீதிபதிகள் எம்.தண்டபாணி, எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.

கடைசி நேரத்தில் இதில் மாற்றம் நிகழவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்