லிபியா நிதி விவகாரம் – சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!!

25 புரட்டாசி 2025 வியாழன் 16:42 | பார்வைகள் : 428
முன்னாள் அரச தலைவர் நிக்கோலா சர்கோஸி, 2007 தேர்தல் பிரசாரத்தில் லிபியா அரசிடம் நிதி பெற்றார் என்ற சந்தேக வழக்கில், பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தால் கூட்டுச்சதி குற்றச்சாட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல், நிதி மோசடி, சட்டவிரோத தேர்தல் நிதி குற்றச்சாட்டுகளில் அவர் விடுவிக்கப்பட்டாலும், முவாம்மர் கத்தாபி ஆட்சியிடமிருந்து நிதி சலுகை பெற்றது உறுதி என நீதிமன்றம் தெரிவித்தது. தண்டனையுடன் தாமதிக்கப்பட்ட கைது வாரண்ட் வழங்கப்பட்டதால், அவர் உடனடியாக சிறைக்கு செல்லமாட்டார்.
70 வயதான சர்கோஸி, விசாரணை முழுவதும் தன்னை நிரபராதி என வலியுறுத்தினார். “என் கௌரவத்தை காப்பாற்றுவேன், அரசியல் பழிவாங்குதலுக்கு அடிபணிய மாட்டேன்” எனவும் தெரிவித்துள்ளார். கடந்தகாலத்தில் ஊழல் மற்றும் தேர்தல் நிதி வழக்குகளிலும் அவர் தண்டிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய தீர்ப்பு அவருக்கு பெரும் அதிர்ச்சியாக கருதப்படுகிறது.