அமெரிக்காவில் நடுவீதியில் இறக்கிவிடப்பட்ட - ஜனாதிபதி மக்ரோன்!!

23 புரட்டாசி 2025 செவ்வாய் 19:24 | பார்வைகள் : 645
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அமெரிக்காவில் வைத்து நடுவீதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிவிட்டு, அங்கிருந்து வெளியேறி நியூயோர்க்கில் உள்ள பிரெஞ்சு தூதரகம் நோக்கி மக்ரோன் அவரது மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். சில நிமிடங்களில் அவரது மகிழுந்தை நியூயோர்க் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வீதி முடக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வழியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செல்வதாகவும் மக்ரோனிடன் தெரிவிக்கப்பட்டது. வீதியில் வீதித்தடையும் அமைக்கப்பட்டிருந்தது.
அதை அடுத்து மகிழுந்தில் இருந்து இறங்கிய ஜனாதிபதி மக்ரோன், அவரது தொலைபேசியில் இருந்து டொனால்ட் ட்ரம்பினை அழைத்தார். “நான் இப்போது எங்கு நிற்கிறேன் தெரியுமா? என்னை வீதியில் இறக்கி விட்டார்கள்” என சிரித்துக்கொண்டே ட்ரம்பிடம் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தெரிவித்த பதில் என்னவென்று தெரியவில்லை.
காவல்துறையினரோடு மிக சகஜமாக சிரித்துக்கொண்டே உரையாடிவிட்டு, அருகில் இருக்கும் பிரெஞ்சு தூதரகத்துக்கு நடந்தே சென்றுள்ளார். அவர் அமெரிக்க வீதியில் நடந்து சென்ற காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.