ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமெரிக்கா பயணம்

22 புரட்டாசி 2025 திங்கள் 16:10 | பார்வைகள் : 174
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இன்றிரவு அமெரிக்காவிற்கு பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி புதன் கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் வெளிநாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி ஈடுபடவுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஜனாதிபதி ஜப்பானில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பான் பேரரசரை சந்திக்கவுள்ளார்.
மேலும் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜப்பானிய பிரதமருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடுவார் என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகள் குறித்து டோக்கியோவில் உள்ள முக்கிய ஜப்பானிய வணிகங்கள் மற்றும்
முதலீட்டாளர்களின் உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வணிக மன்றத்தில் ஜனாதிபதி திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.
2025 எக்ஸ்போதினத்தை முன்னிட்டு ஜப்பான் அரசாங்கத்தின் விருந்தினராக “எக்ஸ்போ 2025 ஒசாகா” நிகழ்விலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.