Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உலகில் தனித்துவம் மிக்க நாடாகத் திகழும் சவுதி அரேபியா

உலகில் தனித்துவம் மிக்க நாடாகத் திகழும் சவுதி அரேபியா

22 புரட்டாசி 2025 திங்கள் 11:57 | பார்வைகள் : 1084


சவுதி அரேபியா மத்திய கிழக்கின் வல்லரசு நாடு. பொருளாதார ரீதியில் பாரிய வளர்ச்சி அடைந்துள்ள இந்நாடு முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் புனித ஸ்தலங்கள் நிறைந்த இடமாகவும் உள்ளது. மத்திய கிழக்கில் தலைநிமிர்ந்து நிற்கும் நாடாகவும் விளங்குகிறது சவுதி அரேபியா.

சவுதிக்கு மத்திய கிழக்கில் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. முஸ்லிம்களின் இரு முக்கிய புனிதஸ்தலங்கள் அங்கிருக்கிறது. புனித குர்ஆன் இறக்கியருளப்பட்ட பூமியாக விளங்கும் சவுதியின் மக்கா மாநகரில் பிறந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் புனித தீனுல் இஸ்லாத்தை உலகமெங்கும் எத்தி வைத்ததும் அங்கிருந்து தான். இத்தகைய தனித்துவ சிறப்புக்களைப் பெற்றுள்ள சவுதி உலக முஸ்லிம்களின் மனதிலும் ஆழமாகப் பதிந்துள்ளது.

அதேநேரம், உலக முஸ்லிம்களின் சகல விடயங்களிலும் கவனம் செலுத்தி அவர்களது மார்க்க மற்றும் உலகளாவிய தேவைகளை பெற்றுக்கொடுப்பதில் முன்நிற்கின்ற நாடாகவும் உள்ளது சவுதி. அது மட்டுமல்லாமல் முஸ்லிம் அல்லாத நாடுகளோடு பரஸ்பர உறவுகளையும் பேணி வருகிறது. உலக வல்லரசு நாடுகளுடன் மிகப் பலமான உறவுகளைக் கொண்டுள்ள சவுதியின் நெருக்கத்தை வல்லரசு நாடுகளும் பெரிதும் விரும்புகின்றன.

அரசியலில் மிகப் பலம் வாய்ந்த நாடாக விளங்கும் சவுதி, மத்திய கிழக்கின் பாரிய சக்தி என்றால் அது மிகப் பொருத்தமானது. மத்திய கிழக்கில் உள்ள நாடுகள் அடங்கலாக உலக முஸ்லிம் நாடுகளும் கூட சவுதி அரேபியாவை தங்களது தலைமைத்துவ நாடாகப் பார்க்கிறது. இது சவுதிக்குக் கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பெரிய கௌரவமாகும்.

உலகில் நாடுகள் மத்தியில் பிரச்சினைகளோ அல்லது அண்டை நாடுகளுடன் முரண்பாடோ அல்லது உள்நாட்டு மோதலோ எதுவானாலும் அதை தீர்த்து வைத்து சமாதானத்தை ஏற்படுத்துவதிலும் சவுதி முன்நிற்கிறது. அந்த வகையில் சூடான் உள்நாட்டுப் போர், ரஷ்யா-உக்ரைன் மோதல், மற்றும் ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் ஆகியவற்றில் தலையிட்டு அவற்றை தீர்த்து வைப்பதிலும் அந்நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் சவுதி முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

அதேநேரம் பலஸ்தீனத்தில் அமைதியை ஏற்படுத்த சவுதி மேற்கொள்ளும் முயற்சிகள் ஏராளம். சவுதியின் ஸ்தாபக மன்னர் அப்துல் அஸீஸ் தொடக்கம் தற்போதைய இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ், இளவரசர் முஹம்மத் பின் சல்மான் வரை சவுதி அரேபியாவின் அனைத்து மன்னர்களும் பலஸ்தீனில் அமைதியை நிலைநாட்ட அயராது உழைத்து வருகின்றனர். அந்த வகையில் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் ஆகியோரின் பணிகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

அதன் பயனாக பலஸ்தீனை தனிநாடாக அங்கீகரித்து அந்த மக்களுக்கு சகல உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கவென சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது சவுதி. அந்த வகையில் பிரான்ஸுடன் இணைந்து கூட்டு தலைமையில் ஐ.நா.வில் கடந்த ஜுலை மாதம் முக்கிய மாநாட்டை நடத்திய சவுதி, ஜ.நா. பொதுச்சைபயில் நியூயோர்க் பிரகடனம் நிறைவேற்றப்படவும் பாரிய பங்காற்றியுள்ளது. அத்தோடு இன்றும் (செப்டம்பர் 22 ஆம் திகதி) பிரான்ஸுடன் இணைந்து கூட்டு தலைமையில் பலஸ்தீனை அங்கீகரிப்பதற்கான மாநாட்டையும் ஜ.நா. வில் நடத்துகிறது. இவ்வாறு பலஸ்தீன மக்களுக்காக இராஜதந்திர ரீதியில் அர்ப்பணிப்புடன் உழைத்துவரும் சவுதியை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து மக்களும் மெச்சிப் பாராட்டுகின்றனர்.

இவை இவ்வாறிருக்க, இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தம் காரணமாக சொல்லன்னா துன்பங்களை அனுபவிக்கும் பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் முன்னுரிமை அடிப்படையில் வழங்குகிறது சவுதி. நூற்றுக்கணக்கான கொள்கலன்களில் உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிப் பொருட்களை தொடர்ந்தும் அனுப்பிய வண்ணமுள்ளன.

சிரியாவில் அமைதியை ஏற்படுத்தி பொருளாதாரத் தடைகளை நீக்கி அங்கு பாரிய அபிவிருத்திக்கு வித்திட்டிருக்கிறது சவுதி. அல்லாஹ்வின் அருளால் சவுதி அரேபியாவின் அயராத முயற்சியால் சிரிய மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் நிலை உருவாகியுள்ளது. இதனையிட்டு சிரிய மக்கள் சவுதி அரேபிய மன்னர் மற்றும் இளவரசரைப் பெரிதும் பாராட்டுகின்றனர்.

சவுதி அரேபியாவை பொருளாதார மற்றும் இதர அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கில் இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் சிந்தனையில் உருவான 2030 விஷன், எக்ஸ்போ 2030 போன்றன ஒரு பாரிய மைற்கல்லாக அமைந்துள்ளது. எக்ஸ்போ 2030 ஆம் ஆண்டாகும் போது முன்மாதிரியான வகையில் தேசிய மாற்றத்தை அடைவதற்கு சவுதிக்குக் கிடைக்க இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

அத்தோடு பொருளாதார ரீதியில் சவுதி தன்னிறைவடைந்து வருகிறது. அதனால் தான் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற பெரும் வல்லரசு நாடுகள் சவுதி அரேபியாவின் பொருளாதாரக் கொள்கையோடு இணைந்து தங்களது பொருளாதாத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்தும் சவுதியோடு மிக நெருக்கமாக செயற்படுகின்றது. சுருங்கக் கூறின் சவுதி உலகில் அனைத்து நாடுகளுக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தாக்கம் செலுத்தும் நாடாக உள்ளது.

2024 இல் சவுதி அரேபியாவிற்கு பயணித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 116 மில்லியன்களை எட்டியுள்ளது. அத்தோடு உம்ராக் கடமையை நிறைவேற்றவும் புராதனச் சின்னங்களை தரிசிக்கவும் என்றடிப்படையில் தங்களது சுற்றுலாத்துறையை மேம்படுத்தவென பல வகை விசாக்களை சவுதி அறிமுகம் செய்துள்ளது. இவ்விசாக்களில் சவுதி அரேபியாவுக்குள் நுழைபவர்களுக்கு ஹஜ் தவிர புனித மக்கா, மதீனா, குபா போன்ற புனித இடங்களை தரிசிக்கவும் உம்ரா செய்யவும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடவும் வாய்ப்பளிக்கப்படும்.

மத்திய கிழக்கிலே மிகப் பெரிய படைப்பலத்தை சவுதி அரேபியா கொண்டுள்ளது. மன்னர் மற்றும் இளவரசருக்கு முற்றிலும் கட்டுப்பட்டு எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்க எந்நேரமும் தயார் நிலையில் சவுதியின் ஆயுத படை உள்ளது. இஸ்ரேலைத் தவிர சிரியா, ஈரான், துருக்கி, யெமன் போன்ற அண்டைய நாடுகளுடனும் நட்புறவைப் புதுப்பித்து வலுப்படுத்தியுள்ளது சவுதி. ஏனைய முஸ்லிம், முஸ்லிம் அல்லாத நாடுகளுடனும் நட்புறவைப் பேணவும் இந்நாடு தவறவில்லை.

இஸ்ரேல் சவுதியுடன் உறவைப் பேண நீண்ட காலமாக முயற்சி செய்கிறது. அநீதி இழைக்கப்பட்ட, ஆக்கிரமிக்கப்பட்ட அல் அக்ஸா பள்ளிவாசலுக்கும், பலஸ்தீன மக்களுக்கும் அனைத்து நீதிகளையும் இஸ்ரேல் வழங்கி, அவர்களது உரிமைகளை முழுமையாகக் கொடுத்து, சர்வதேச உடன்படிக்கைளை சரியாக நிறைவேற்றும் பட்சத்தில் பேச்சுவார்த்தை நடாத்த யோசிக்கலாம் என்று எப்போதோ சவுதி அரேபியா இஸ்ரேலுக்கு அறிவித்து விட்டது.

மேலும் உலக மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் சவுதி முதன்மையான நாடாக விளங்குகிறது. சவுதியின் தலைநகரில் இயங்கும் 'மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்" சவுதி அரேபியாவின் மனிதாபிமானத்தை உலகிற்கே எடுத்தியம்புகிறது. சவுதியின் இம்மனிதாபிமான மையத்தின் மூலம் உலகெங்கும் இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுகிறது. உலகில் எங்காவது இயற்கை அனர்த்தங்கள், பாதிப்புக்கள் ஏற்பட்டால் சவுதி அரேபியா மீட்புக் குழுக்கள் மற்றும் விஷேட விமானங்களுடன் அங்கிருப்பதை அவதானிக்கலாம்.

இம்மையம் இலவச சிகிச்சைகள், இலவச கண் சத்திர சிகிச்சைகள், பாரிய நோய்களுக்கான நிவாரணங்கள் போன்றவற்றை உலகமெங்கும் மேற்கொள்கின்றது. உலகில் ஒட்டிப் பிறந்த 70க்கும் மேற்பட்டவர்களை தனது நாட்டுக்கு விஷேட விமானம் மூலம் அழைத்து வந்து அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்று எவ்வித பாதிப்புகளுமின்றி பிரித்து உலக சாதனை புரிந்துள்ளது இம்மையம்.

அந்த வகையில் இம்மையம் பாரிய மனிதாபிமான வேலைத்திட்டங்களை இலங்கையிலும் முன்னெடுத்து வருகிறது. இன, மத பேதமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் நன்மைபெறும் வகையில் இலவச கண்சத்திர சிகிச்சை முகாம்கள் வருடாவருடம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் இலவசமாக கண்பரிசோதனை, மருந்து மற்றும் கண்ணாடி விநியோகம் என்பன இடம்பெறுகிறது. அத்தோடு இந்நாட்டு முஸ்லிம்களுக்கென வருடாவருடம் ஆயிரக்கணக்கான தொன் பேரீச்சம்பழம் வழங்கப்படுகின்றன. 2015 முதல் இன்று வரையும் இவ்வாறான பல மனிதாபிமான வேலைத்திட்டங்களை இலங்கையிலும் உலகின் பலநாடுகளிலும் சவுதி முன்னெடுத்துள்ளது. உலகின் அனைத்து மக்களதும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ள இம்மையத்தின் பணிகள் சவுதி மனிதாபிமானத்தில் உலகையே வென்று விட்டது எனலாம்.

அதேவேளை சவுதி இஸ்லாமிய விவகார அமைச்சின் பணிகளும் மிகவும் பாராட்டத்தக்கது. இந்த அமைச்சு சவுதி அரேபியாவிலும் உலக நாடுகளிலும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை நடாத்தி வருகிறது. குறிப்பாக அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் ஆல் ஷைக் இவ்வமைச்சுப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பல இஸ்லாமிய சமய, கலாசார நிகழ்ச்சிகளையும் அல்குர்ஆன் அஸ் ஸுன்னாவின் பக்கம் மக்களை அழைக்கும் தஃவாப் பணியையும் மத நல்லிணக்க மாநாடுகளையும் நடாத்தி பல சாதனைகளைப் படைத்துள்ளார். குறிப்பாக இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் மத நல்லிணக்க மாநாடுகளையும் சர்வதேச, பிராந்திய அல்குர்ஆன் மனனப்போட்டிகளையும் நடாத்துகிறது.

குறிப்பாக குர்ஆன் மனனப்போட்டிகளை சுமார் 75 வருடங்களாக சர்வதேச மட்டத்தில் நடத்திவருகிறது. கடந்த மாதம் கூட 128 நாடுகளை உள்ளடக்கி 178 பேரை உலகமெங்குமிருந்து தேர்ந்தெடுத்த ஹாபிழ்களுக்கென இத்தகைய போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியின் நிறைவில் சுமார் 40 கோடி ரூபாய் பணப்பரிசில்களை வழங்கி புனித அல்குர்ஆனுக்கும் அல் குர்ஆனை சுமந்த ஹாபிழ்களுக்கும் அதி உயர் கௌரவத்தை அளித்தது சவுதி.

அந்த வகையில் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் இரு தடவைகள் அல்குர்ஆன் மனனப் போட்டிகள் நடாத்தப்பட்டு பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கி இலங்கை ஹாபிழ்களும் கௌரவிக்கப்பட்டனர்.

பயங்கரவாத தீவிரவாத ஒழிப்பு விடயத்திலும் சவுதி அரேபிய எப்போதும் பின்நிற்பதில்லை. பயங்கரவாத ஒழிப்பு மாநாடுகளை சவுதி உட்பட பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நடாத்தி வருகிறது. உலகின் பல நாடுகளில் இருந்தும் புத்திஜீவிகள், உலமாக்கள், முப்திகளை சவுதி அரேபியாவின் செலவில் மக்காவிற்கு அழைத்து சமாதானம், சகிப்புத்தன்மை, சகவாழ்வு, பயங்கரவாத எதிர்ப்பு மாநாடுகளை தொடர்ந்தும் நடாத்தி வருகிறது.

இலங்கை உட்பட உலக நாடுகளில் இருந்து வருடாவருடம் 5000க்கும் மேற்பட்டவர்களை மன்னர் சல்மான் தனது சொந்த செலவில் புனித ஹஜ் உம்ரா கடமைகளை இலவசமாக நிறைவேற்ற வாய்ப்புகளை வழங்குகிறார். இலங்கையில் இருந்தும் பலருக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்கிறது.

இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும் சவுதி இந்நாட்டோடு பலமான இராஜதந்திர உறவுளை அன்று தொட்டு பேணி வருகிறது. அந்த வகையில் தற்போதைய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் பலமாகக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர்கள் அயராது உழைத்து வருகிறார். அவரது பணிகள் மெச்சிப்பாராட்டத்தக்கவை. இலங்கைக்கான தூதுவராக அவர் பதவியேற்றது முதல் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் புதிய அத்தியாயம் உதயமானது என்றால் அது மிகையாகாது.

அதேநேரம் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நட்புறவு 50 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இந்த நட்புறவின் பின்புலத்தில் இந்நாட்டின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திகளுக்கும் சவுதி பாரிய பங்களிப்புகளையும் நல்கி வருகிறது.

அவற்றில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் தொகுதிக்கான கட்டடம், பாலங்கள், சுனாமி வீடமைப்பு திட்டம், பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடு, பாதைகள், நீண்ட கால வட்டியில்லா கடனுதவி, இலங்கையருக்கு சவுதியில் வேலைவாய்ப்புகள், இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா போன்றன குறிப்பிடத்தக்கவையாகும்.

ஆகவே மன்னர் சல்மானினதும் இளவரசர் முஹம்மத் பின் சல்மானினதும் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியினதும் சவுதி அரேபிய மக்களதும் பணிகளையும் சேவைகளையும் இறைவன் அங்கீகரித்து அருள்புரியட்டும்.

நன்றி tamilmirror

வர்த்தக‌ விளம்பரங்கள்