Paristamil Navigation Paristamil advert login

இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்கும் அஸ்வின்

இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்கும் அஸ்வின்

20 புரட்டாசி 2025 சனி 08:53 | பார்வைகள் : 115


ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் அஸ்வின் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

அதன் பின்னர், 2025 ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடி வந்தார். கடந்த மாதம் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ILT20 தொடருக்கான ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார்.

மேலும், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ்(Big Bash)T20 லீக் தொடரிலும், அஷ்வினை விளையாட வைப்பதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்நிலையில், அஸ்வின் மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார்.

ஹாங்காங்கில் நடைபெறும் ஹாங்காங் சிக்ஸ் தொடரில் அஸ்வின் இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.

இந்திய அணிக்காக இந்த தொடரில் விளையாட போவது குறித்து பேசிய அஸ்வின், இந்த 6 வடிவ ஓவர் தொடரில் விளையாட வித்தியாசமான உத்தி தேவைப்படுகிறது.

எனது முன்னாள் அணி வீரர்களுடன் விளையாட ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். எதிரணி அணிகளில் உள்ள சில தரமான வீரர்களுக்கு எதிராக போட்டியிடுவதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, இது எங்களுக்கு ஒரு நல்ல சவாலாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

1992 ஆம் ஆண்டு முதல் ஹாங்காங் சிக்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளாக இந்த தொடர் நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் பல வித்தியாசமான விதிமுறைகளை கொண்டுள்ளது.

இதில், ஒரு அணிக்கு 6 வீரர்கள் மட்டுமே இருப்பார்கள். ஒரு இன்னிங்ஸிற்கு 6 ஓவர்கள் வீசப்படும். விக்கெட் கீப்பரை தவிர அனைவரும் ஒரு ஓவர் வீச வேண்டும்.

ஒரு வீரர் 50 ஓட்டங்கள் எடுத்து விட்டால், ஆட்டமிழக்காமல் ஓய்வு பெற்று விடுவார்.மற்ற துடுப்பாட்டக்காரர்கள் ஆட்டமிழந்த பிறகு மீண்டும் களத்திற்கு வரலாம்.

5 வது ஓவருக்கு முன்னர் 5 விக்கெட் விழுநதாலும், 5 வீரர் ரன்னராக செயல்பட்டு, 6வது வீரர் துடுப்பாட்டம் ஆடலாம்.

இதில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு அணிகள் விளையாடி வருகிறது.

கடந்த 2024 தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்று, நடப்பு சாம்பியனாக உள்ளது.

இதில்,பாகிஸ்தான் 5 முறை சாம்பியன் பட்டமும், 6 முறை 2வது இடமும் பிடித்து வெற்றிகரமான அணியாக உள்ளது. 2005 தொடரில் மட்டும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

வரும் நவம்பர் 7 ஆம் திகதி முதல் நவம்பர் 9 ஆம் திகதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்