பல நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தை: ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என்கிறார் பியூஷ் கோயல்!

20 புரட்டாசி 2025 சனி 08:01 | பார்வைகள் : 133
இந்தியாவின் ஏற்றுமதி சீராக அதிகரித்து வருகிறது. பல நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியாவின் ஏற்றுமதி நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக நான் தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்தாண்டை விட இந்த ஆண்டும் அதிகரிக்கும் என நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து, சிலி, பெரு, ஓமன் மற்றும் பல நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதிகள் வேகமாக அதிகரித்து வருகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் தங்களது பங்களிப்பை வழங்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
இந்த வாரம் தொடக்கத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. இந்த சூழலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார்.