Paristamil Navigation Paristamil advert login

நாட்டின் பொருளாதார நிலை வலுவடைந்தால் ஜி.எஸ்.டி., விகிதம் ஒன்றாக குறைக்கப்படும்

நாட்டின் பொருளாதார நிலை வலுவடைந்தால் ஜி.எஸ்.டி., விகிதம் ஒன்றாக குறைக்கப்படும்

20 புரட்டாசி 2025 சனி 05:01 | பார்வைகள் : 140


நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றால் தற்போது 2 ஆக குறைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரி விகிதம் ஒன்றாக குறைக்கப்படும்,'' என, மதுரையில் நடந்த தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி.,க்கு முன் ஒரு பொருளுக்கான வரி மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். மறைமுக வரிகள் அதிகம் இருந்தன. 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்திய போது 5, 12, 18, 28 சதவீத வரி விகிதங்கள் ஏற்படுத்தப்பட்டன. பொருளுக்கான வரி வேறுபாட்டின் சராசரியை கணக்கிட்டு அதனடிப்படையில் மேற்கண்ட 4 விகிதங்களில் ஒன்று தேர்வு செய்யப்பட்டது. இப்படித்தான் பொருட்களுக்கு வரி வகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன.

நாடு முழுவதும் ஒரே வரி ஆனால் துவக்கத்தில் வரியை ஏற்றிவிட்டு தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கின்றனர். அதை எதிர்க்கிறேன். ஜி.எஸ்.டி., வரி விகித நிர்ணயத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்களுக்கும் பங்குள்ளன. நாடு முழுதும் ஒரே வரி நடைமுறையை கொண்டு வரும் முயற்சியில் ஜி.எஸ்.டி., கொண்டு வரப்பட்டது.

கொரோனா தாக்கம் வந்ததால் நாட்டின் பொருளாதார நலன் கருதி வரி விகிதங்கள் தொடர்ந்தன. அதனடிப்படையிலான வருமானமும் உயர்ந்தன. 2018 நிதியாண்டில் ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது பொருளாதார நிலை உயர்ந்துள்ளதால் வரி விகிதம் நான்கில் இருந்து இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. 375 பொருட்களின் விலை 5, 18 சதவீதம் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மக்களை மனதில் வைத்து வரி சீர்திருத்தம் வருமான வரி, கார்ப்பரேட் வரி போன்றவை குறிப்பிட்ட பிரிவினருக்கானது. ஆனால் ஜி.எஸ்.டி., வரி நாட்டின் ஒவ்வொரு மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. நடுத்தர மக்களை மனதில் வைத்து ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 99 சதவீத பொருட்கள் 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன. 90 சதவீதம் பொருட்கள் 28ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.

2017ல் 65 லட்சம் வியாபாரிகள் இணைந்த நிலையில் தற்போது 1.51 கோடி வியாபாரிகள் ஜி.எஸ்.டி., யில் இணைந்துள்ளனர். எதிர்க்கட்சியினர் கூறுவது போல ஜி.எஸ்.டி., கொடூரமான வரிமுறையாக இருந்தால் அதில் சேருபவர்கள் எண்ணிக்கை எப்படி உயரும். தற்போது மேற்கொள்ளப்பட்ட வரி விகித குறைப்பால் ரூ.2 லட்சம் கோடி நாட்டின் பொருளாதாரத்திற்குள் புகுத்தப்பட்டுள்ளது. அதாவது அரசுக்கு வரி செலுத்துவதில் இருந்து மக்கள் கைகளிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

வரி குறைப்பால் மக்களிடம் அதிக பணம் சேரும். இதனால் பொருட்களை அதிகம் வாங்குவர். ஊழியர்கள் பெறும் சம்பளத்தில் வரி கட்டுவர். நாட்டிற்கு வருமானம் அதிகரிக்கும். இதுவே பொருளாதார சுழற்சி.

பிரதமர் மோடி அறிவுறுத்தல் எட்டு மாதங்களுக்கு முன்பே நடுத்தர மக்கள், எம்.எஸ்.எம்.இ., துறைகள் பயன்பெறும் வகையில் வரி சீர்திருத்தம் மேற்கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

நாட்டின் 40 சதவீத ஏற்றுமதி, எம்.எஸ்.எம்.இ., மூலம் நடக்கிறது. அக்ரோ, உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழகம் நாட்டிலேயே 2ம் இடத்தில் உள்ளது. 8 புவிசார் குறியீடுகள் இங்குள்ள உணவுப்பொருட்களுக்கு கிடைத்துள்ளன.

நாட்டின் வளர்ச்சி, வரி மூலம் பெறப்படும் நிதி சார்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., வரி வருமானத்தால் நாட்டின் கட்டமைப்பு உயர்ந்து உள்ளது. 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளிவந்துள்ளனர். 350 ஆக இருந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 1.5 லட்சமாக அதிகரித்துள்ளன.

பொருளாதார நிலை மேலும் வலுப்பெறும் போது 2 ஆக குறைக்கப்பட்டுள்ள வரி விகிதம் ஒன்றாக குறைக்கப்படும். இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

முன்னதாக சங்கத்தலைவர் வேல் சங்கர் வரவேற்றார். கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், சக்தி மசாலா இயக்குநர்கள் சாந்தி, துரைசாமி, இதயம் நிறுவன இயக்குனர் முத்து, உணவு விஞ்ஞானி பசுபதி, வணிக வரி ஆலோசகர் தியாகராஜன், அணில் சேமியா நிறுவன இயக்குநர் சுகுமார், நடராஜ் ஆயில் மில்ஸ் இயக்குநர் செந்தில்நாதன், பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்