ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் 20 இடங்களில் ஈ.டி., சோதனை

19 புரட்டாசி 2025 வெள்ளி 09:05 | பார்வைகள் : 126
ஆந்திராவில் 3,500 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையினர் நேற்று ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்தில், 20 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஆந்திராவில் 2019 - 24 மே வரை, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்தது.
அப்போது தனியாரிடம் இருந்த மதுக்கடைகள், ஆந்திர பிரதேச மதுபானக் கழகத்தின் கீழ் வந்தன. அந்த கழகத்துக்கு தேவையான மதுவை பிரபலமில்லாத தனியார் மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ததில் 3,500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவி னர், ஒய்.எஸ்.ஆர்.காங்., லோக்சபா எம்.பி., மிதுன் ரெட்டி உட்பட பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் மிதுன் ரெட்டி மீது மூன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.
இதில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகனுக்கு மாதம் 60 கோடி ரூபாய் வரை லஞ்சம் தரப்பட்டதாக போலீசார் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த ஊழல் குறித்து பணமோசடி தடுப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
அவர்கள் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்புடைய தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, டில்லி உட்பட 20 இடங்களில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.