வாக்குறுதியை மீறும் புடின் நிர்வாகம்

18 புரட்டாசி 2025 வியாழன் 19:18 | பார்வைகள் : 189
பட்ஜெட் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ரஷ்ய அரசாங்கம் மதிப்பு கூட்டப்பட்ட வரி விகிதத்தை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், கைருப்புகளைப் பராமரிக்கவும் உதவும் என புடின் அரசாங்கம் நம்புகிறது.
ஆனால் போர் முடிவுக்கு வரும் வரையில் எவ்வித வரி உயர்வும் இருக்காது என பொதுமக்களுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் அளித்த வாக்குறுதியை மீறும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த வரைவு பட்ஜெட் செப்டம்பர் 29 ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முக்கிய அம்சங்கள் ஜனாதிபதி புடினுடன் முன்கூட்டியே ஒப்புதல் பெறப்பட்டுள்ளது, மேலும் முறையான நாடாளுமன்ற விவாதத்தின் போது அவை மாற்றப்பட வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது.
மூன்று நாட்களில் உக்ரைனுடனான போரை முடித்துக்கொள்ள புறப்பட்ட ரஷ்ய ராணுவம், தற்போது நான்காவது ஆண்டாக போரைத் தொடர்கிறது. இந்த ஆண்டில் மட்டும் ரஷ்ய நிர்வாகம், தனிநபர் வருமான வரி மற்றும் பெருநிறுவன வரிகளை உயர்த்தியுள்ளது.
ஆனால் புடின் நிர்வாகம் மே மாதத்தில் அதன் ஃபெடரல் பட்ஜெட் பற்றாக்குறை மதிப்பீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதமாக மூன்று மடங்காக உயர்த்த வேண்டியிருந்தது.
இந்த நிலையில் தற்போது பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த, மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விகிதத்தை 20 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவது குறித்து புடின் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் எதிர்பாராத எண்ணெய் வருவாயை ஒதுக்கி வைக்கும் பட்ஜெட் விதி அமுலில் இருக்கும் வரை, 2026 பட்ஜெட்டுக்கு இந்த வரி உயர்வு பரிசீலிக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கிய போதிலும் ரஷ்யாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு 4.3 சதவீதமாக இருந்த நிலையில் சுமார் 1 சதவீதம் குறையும் வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
மேலும் பணவீக்கம் 8 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது. மட்டுமின்றி, வருவாயின் 40 சதவீதம் போருக்கும் பாதுகாப்புக்கும் என செலவிடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வரி உயர்வுகளைத் தொடர்ந்து, 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றே 2024 ஆம் ஆண்டு புடின் உறுதியளித்திருந்தார்.