பரிஸ் : வீடொன்றில் இருந்து ரைஃபிள், பிஸ்ட்டல் துப்பாக்கிகளும், 100,000 சன்னங்களுக்கு மீட்பு!!

18 புரட்டாசி 2025 வியாழன் 11:45 | பார்வைகள் : 639
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
Rue de Belleville வீதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 8.55 மணிக்கு அதிரடியாக உள் நுழைந்த காவல்துறையினர், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுத மூட்டைகளை வெளியே எடுத்தனர். அதில் 100,000 துப்பாக்கிச்சன்னங்களும், பத்துக்கும் மேற்பட்ட ரைஃபிள் துப்பாக்கிகளும், மூன்று பிஸ்ட்டல் துப்பாக்கிகளும், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் கறுப்பு மருந்துகளும் அதில் இருந்துள்ளன.
குறித்த வீட்டில் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரராக பதிவு செய்துள்ளதோடு, சில நேரங்களில் வெளிப்படையாக துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீண்டகாலமாக குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் போதும் அவர் மீது சந்தேகம் எழவில்லை என அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அண்மையில் சில மாதங்களாக அவரைக் காணவில்லை எனவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.