மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு

18 புரட்டாசி 2025 வியாழன் 09:03 | பார்வைகள் : 142
யாழ். குடாநாட்டின் 1991 இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டை தீவுப் பகுதியில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் அங்குள்ள தேவாலயக் காணியின் கிணறு உட்பட 3 கிணறுகளில் போட்டு மூடப்பட்டன என்று கூறப்படுவது தொடர்பில் விசாரித்து, அந்தக் கிணறுகளைச் சட்டரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
யாழ். குடாநாட்டின் தீவகப் பகுதியைப் படையினர் கைப்பற்றிய போது, படையினரும் ஓர் ஒட்டுக் குழுவும் இணைந்து பலரைக் கைது செய்து, சுட்டுக் கொன்று, மண்டைதீவின் தேவாலயக் கிணறு உட்பட 3 இடங்களில் உள்ள கிணறுகளில் போட்டு மூடினர் எனக் கண் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் சில மத குருமாரும் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர் எனத் தெரிகின்றது.
அடையாளம் காணப்பட்ட கிணறுகளை அகழ உத்தரவிடக் கோரியே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது, ஊர்காவற்துறை பொலிஸாரிடம் அகழ்வு பணியை மேற்கொள்வதற்கான வசதிகள் இல்லை என சுட்டிக்காட்டியதை அடுத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் குறித்த வழக்கு பாரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் குறித்த மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு தொடர்பாக பொலிஸார் கால அவகாசம் கோரியதால் எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.