டி.ஆர்.பாலுவின் அரசியல் வரலாற்றை மக்கள் முன் வைக்க உள்ளோம்: சொல்கிறார் அண்ணாமலை

14 ஐப்பசி 2025 செவ்வாய் 12:49 | பார்வைகள் : 102
டி.ஆர்.பாலு அரசியலுக்கு வந்ததில் இருந்து, அவரது 40 ஆண்டு அரசியல் வரலாற்றை கோர்ட் மூலம் மக்கள் முன் வைக்க உள்ளோம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, ''திமுக பைல்ஸ்'' என்ற பெயரில் அக்கட்சி நிர்வாகிகளின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார் பின்னர் தனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், அண்ணாமலை பேசியதாக டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பின் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
இன்று மெமோ பைல் செய்து இருக்கிறோம். டிஆர்பாலு என் மீது தொடர்ந்த வழக்கில், நானே நேரடியாக விசாரணை நடத்த போகிறேன். இன்று நீதிபதியிடம் எனக்கு பால். கனகராஜ் உதவி புரிவார் என்று கூறினேன். அடுத்த குறுக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் இந்த வழக்கில் நானே ஆஜர் ஆகி, திமுக பைல்ஸ் இருந்து ஆரம்பித்து, என்னுடைய தரப்பு வாதங்களை முன் வைக்க இருக்கிறோம்.
நிச்சயம் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. டி.ஆர்.பாலு அரசியலுக்கு வந்ததில் இருந்து, அவரது 40 ஆண்டு அரசியல் வரலாற்றை கோர்ட் மூலம் மக்கள் முன் வைக்க உள்ளோம். 2023ம் ஆண்டு திமுக பைல்ஸ் வெளியிட்டதன் நோக்கமே, எப்படி தமிழகத்தில் ஊழல் பெருச்சாளிகள் நம்மை ஊறிஞ்சு அண்டி கொண்டு இருக்கிறார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும்.
அதனால் தான் நான் இதுவரை யார் மீதும் மான நஷ்ட வழக்கு தொடுக்கவில்லை. ஆனால் திமுகவினர் வேறு யாராவது வழக்கு தொடுக்க வேண்டும் என்று காத்து கொண்டிருந்தோம்.கரூர் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 பேரிடம் பொய் சொல்லி கையெழுத்து பெற்று கரூர் சம்பவம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டதா? என்பதை தாமாக சுப்ரீம்கோர்ட் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: வழக்கு மீண்டும் நவம்பர் 11ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. அன்றைக்கு அண்ணாமலை வந்து குறுக்கு விசாரணை நடத்தப்போவதாக சொல்லி இருக்கிறார்கள். நான் விசாரணை நடத்திய அளவிற்கு அவர் செய்தால் ரொம்ப மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.