Paristamil Navigation Paristamil advert login

கணவர் வெளிநாட்டில் - நகைகள் களவாடப்பட்டதாக ஏமாற்றி நாடகமாடிய பெண் கைது

 கணவர் வெளிநாட்டில் - நகைகள் களவாடப்பட்டதாக ஏமாற்றி நாடகமாடிய பெண் கைது

9 ஐப்பசி 2025 வியாழன் 18:20 | பார்வைகள் : 203


நகைகள் களவாடப்பட்டதாக கணவரிடம் தப்பிக்கும் நோக்கத்துடன் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய 32 வயது குடும்பப் பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி, அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்-மஸ்லம் வீதி பகுதியில் உள்ள வீட்டில் சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டதாக 32 வயது குடும்பப் பெண் ஒருவர் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யூ.எஸ். நிசாந்த வெதகேவின் வழிகாட்டலில், பெருங்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையில் பொலிஸ் குழுக்கள் துரித விசாரணைகளை மேற்கொண்டன.

இதில் அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் மோப்பநாய் பிரிவு ஆகியவை பங்கேற்றன.

இருப்பினும், குறித்த வீட்டில் களவு நடந்ததற்கான சான்றுகளோ, 45 இலட்சம் ரூபாய் நகைகள் திருடப்பட்டதற்கான ஆதாரங்களோ எதுவும் கிடைக்கவில்லை.

விசாரணையின் தொடர்ச்சியில், முறைப்பாட்டாளரான அந்தப் பெண்ணில் சந்தேகம் ஏற்பட்டதால், பொலிஸார் கடந்த ஒக்டோபர் 3 ஆம் திகதி அவரை தீவிர விசாரணைக்கு அழைத்தனர்.

இதன் போது பல்வேறு உண்மைகள் வெளியாகின. அதன்படி, கணவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற நிலையில், தனியாக இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த அந்தப் பெண், தனது கையிருப்பில் இருந்த பணம் மற்றும் நகைகளை பல்வேறு தேவைகளுக்காக செலவழித்திருந்தார்.

இந்நிலையில், கணவர் திடீரென நாடு திரும்புவதாக அறிவித்ததால் கலவரமடைந்த அந்தப் பெண், 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டதாக நாடகமாடி, கல்முனை பகுதியில் உள்ள பிரபல நகையகத்திற்குச் சென்று நகைகளை விற்றதை ஒப்புக்கொண்டார்.

இச்செயலைக் கண்டுபிடிக்காமல் தப்பிக்க, கணவர் வெளிநாட்டில் இருந்து திடீரென இலங்கை வருவதாகக் கூறி, நகைகள் திருடப்பட்டதாக நாடகம் அரங்கேற்றியதாக அவர் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அந்தப் பெண் கைது செய்யப்பட்டு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் உத்தரவிட்டார்.

பின்னர், சந்தேக நபரான அந்தப் பெண் சார்பில் இடைமனு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், கடும் எச்சரிக்கையுடன் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்