Paristamil Navigation Paristamil advert login

போதாக்குறைக்கு பாலியல் பிரச்சினைகளுமா?

போதாக்குறைக்கு பாலியல் பிரச்சினைகளுமா?

8 ஐப்பசி 2025 புதன் 15:48 | பார்வைகள் : 115


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அநாவசியமாக சிக்கிக்கொண்ட ஒரு பிரச்சினையைப் பற்றி நாம் கடந்த வாரம் மேலோட்டமாக குறிப்பிட்டு இருந்தோம். அதாவது ஓரினச் சேர்க்கைப் போக்கு போன்ற பாலியல் நடைமுறையில் மாற்றமாக நடந்து கொள்வோரை (LGBTQ) மையமாக வைத்து சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று அண்மையில் அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தமையே அந்தப் பிரச்சினையாகும்.

மனிதர்களின் பாலியல் நடத்தையை அடிப்படையாகக் கொண்டு அவர்களிடையே பல பிரிவினர்கள் இருப்பதாக சமூகவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். பொதுவாக, ஆண்களும் பெண்களுமே பாலியல் உறவு கொள்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே குடும்பம் என்பது உருவாகிறது.

ஆனால், சில ஆண்கள் ஆண்களுடனும், சில பெண்கள் பெண்களுடனும் உறவு கொள்கிறார்கள். சிலர் இரு பாலாருடனும் உறவு கொள்கிறார்கள். சிலரது பாலினத்தன்மை மாறுபட்டு வருகிறது. சிலரது பாலினத்தன்மை தெளிவாக இல்லை. வேறு சிலர் பாலியல் உறவைப் புறக்கணிக்கின்றனர்.

இந்த குழுக்களை குறிப்பதற்காக ஆங்கிலத்தில் Lesbian, Gay, Bisexual, Transgender (LGBTQ) என்ற சொற்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தமிழில் அக்குழுக்களைக் குறிப்பதற்காக முறையே நேர்பாலீர்ப்பு பெண், நேர்பலீர்ப்பு ஆண், இருபலீர்ப்பாளர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நான்கு பிரதான வித்தியாசமான பாலினத்தவர்களைத் தவிர, மேலும் ஒரு சில குழுக்களும் இருக்கின்றன. அவற்றையும் சேர்த்து குறிப்பிடும் போது, ஆங்கிலத்தில் அவை LGBTQIA+ என்று குறிப்பிடப்படுகின்றன. அரசாங்கம் சிக்கிக்கொண்ட சர்ச்சையை ஆராய்வதற்காக இவ்வனைத்து குழுக்களையும் LGBTQ என்று இப்போதைக்கு சுருக்கமாக இங்கு குறிப்பிடுகிறோம்.

இலங்கையில் இக்குழுக்களின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் Equal Ground என்ற அமைப்பு இக்குழுக்களை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறை பிரசார இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக அண்மையில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையிடம் அறிவித்து இருந்தது. அதனை அவ்வதிகார சபையும் வரவேற்று இருந்தது.

இது தொடர்பாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக்க ஹேவாவசம் மேற்படி அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரொசன்னா பிளேமர் கல்தேராவுக்கு அனுப்பிய கடிதத்தில் Equal Ground அமைப்பின் திட்டத்தைப் பாராட்டி அது இலங்கையின் உல்லாசப் பிரயானச் சந்தையை மேலும் விரிவாக்கும் என்றும் இலங்கை சகல பிரயாணிகளுக்கும் பாதுகாப்பான இடம் என்பதை மேலும் வலியுறுத்தும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அத்தோடு, இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தேவையான பயிற்சியையும் அறிவூட்டலையும் வழங்க அவர் Equal Ground அமைப்புக்கு அனுமதியையும் வழங்கி இருந்தார்.

இத்திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடமும் சுற்றுலாத்துறை அமைச்சரான வெளிநாட்டு அமைச்சர் விஜித்த ஹேரத்திடமும் சமர்ப்பிக்க வசதிகளைச் செய்து தருவதாகவும் ஹேவாவசம் தமது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அப்போது ஜனாதிபதி தமது அமெரிக்க மற்றும் ஜப்பான் விஜயங்களில் ஈடுபட்டு இருந்தார்.

இந்த நிலையில், நாட்டில் முக்கிய சமயத் தலைவர்கள் சிலர் இந்தக் கடிதத்தைப் பற்றி அறிந்து கொதித்து எழுந்தனர். கத்தோலிக்க மக்களின் சமயத் தலைவரான கொழும்பு பேராயர், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் கடந்த 29ஆம் திகதி இந்தத் திட்டத்தை மிக மோசமாக தாக்கிப் பேசினார்.

நாட்டில் விந்தையான கலாசாரம் ஒன்று உருவாகி வருவதாகவும் அரசாங்கத்தின் கொள்கையாலன்றி சில இயக்கங்களில் நடவடிக்கைகளால் அந்த நிலைமை உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு பாலியல் ஈர்ப்புக்களைக் கொண்டவர்களின் உரிமைகளை மதிப்பதும் அவர்களையும் சமமாக மதிப்பதும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்த போதிலும், அந்த ஈர்ப்புக்களை ஊக்குவித்து எமது சிறுவர்களை தன்னினச் சேர்க்கையாளர்களுக்கு இரையாக்க இடமளிக்க முடியாது என்ற அவர் கூறினார்.

ஆட்சியாளர்களுக்கு சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர் அனுப்பிய கடிதத்தைப் பற்றி தெரியுமா? இதனால் எமது சிறுவர்கள் பாதிக்கப்படப்போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா? என்று கேள்வி எழுப்பிய கர்தினால் சிறுவர்களே எமது மகத்தான சொத்தாகும், நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

இலங்கையின் பௌத்தர்களின் நான்கு பிரதான பிரிவுகளான மல்வத்த, அஸ்கிரிய, ராமஞ்ஞ மற்றும் அமரபுர ஆகிய நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி இந்தப் பிரச்சினையைப் பற்றி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

பல்வேறு பாலியல் ஈர்ப்புக்களைக் கொண்டவர்களின் வாழ்க்கை முறையை இலங்கையில் பரப்ப எடுக்கப்படும் முயற்சிகளை அவர்கள் அதில் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

சில குழுக்கள் தன்பாலீர்ப்பு நடத்தைகளையும் அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்களையும் சாதாரண நிலைமையாக மாற்ற முயல்வதாகவும் அது சிங்கள பௌத்த கலாசார விழுமியங்களை அழித்துவிடும் என்றும் மகாநாயக்க தேரர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால், இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க அல்லாத ஏனைய கிறிஸ்தவ சமயத் தலைவர்கள் இந்த விடயத்தை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அச்சமயத்தவர்களும் சமய அடிப்படையில் ஆண்-பெண் பாலியல் உறவைத் தவிர, ஏனைய பாலியல் ஈர்ப்புக்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றைப் பாவமாகவும் கருதுகிறார்கள்.

சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர் இவ்வாறான கடிதமொன்றை அனுப்பினார் என்பது சுற்றுலாத்;துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ தெரியாது போலும். அவர்களும் எதிர்ப்புக்கள் வந்ததை அடுத்தே அதனை அறிந்துள்ளனர் போலும். எனவே, செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதியே அமைச்சு விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டது.

பல்வேறு பாலியல் ஈர்ப்புக்களைக் கொண்டவர்களுக்கான சுற்றுலாத் திட்டமொன்றைச் செயற்படுத்தும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று அமைச்சு அதில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டுக்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் அவர்களின் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டோ அல்லது அவர்களின் பாலியல் ஈர்ப்புக்களின் அடிப்படையிலோ பார்க்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் சகலரும் சமமாகவே மதிக்கப்படுவார்கள் என்றும் அரசாங்கம் அவ்வறிக்கையில் கூறுகிறது.

இலங்கை சகல பாலியல் சமூகங்களையும் அவர்களது தனித்துவத்தையும் மதிக்கிறது. ஆனால், அதனால் குறிப்பிட்டதோர் பாலியல் நடத்தையை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவோ ஊக்குவிப்பதாகவோ தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலாத்துறை அதிகார சபையின் அறிக்கையானது உலக சுற்றுலாத்துறையை அணுக மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியே தவிர அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை உத்திகளில் எந்தவொரு மாற்றத்தையும் அது கோடிட்டுக் காட்டவில்லை என்றும் அரசாங்கம் கூறுகிறது.

அரசாங்கம் இந்த விடயத்தை எந்தளவு பாரதூரமாக எடுத்தது என்றால் பௌத்த பிக்குகளின் முக்கிய கூட்டமொன்றில் உரையாற்றும் போதும் ஜனாதிபதி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்திக் கூறினார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி அஸ்கிரிய பீடத்தின் துணைத் தலைவராகப் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட நாரம்பனாவே ஆனந்த தேரருக்கு சன்னஸ் பத்திரத்தை (நியமனக் கடிதத்தை) வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ஒழுக்கமற்ற தன்பாலின நடத்தையை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் கொள்கையோ சுற்றுலாத்துறையின் கொள்கைகளோ அல்ல என்று கூறினார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் ஒருவித சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளதாகவே தெரிகிறது. ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியே இலங்கையில் முதன் முதலில் LGBTQ அல்லது பல்வேறு பாலியல் ஈர்ப்புக்களைக் கொண்ட குழுக்களின் உரிமைகளை அங்கீகரித்த கட்சியாகும்.

இக்குழுக்கள் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் ஓரினப்பால் திருமணமும் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ் நாட்டிலேயே இக்குழுக்களின் உரிமைகள் கூடுதலாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அங்கு 2022ஆம் ஆண்டு அக்குழுக்களை குறிப்பதற்கான சொற்கள் வர்த்தமானி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு அக்குழுக்களுக்குப் பாகுபாடு காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை பேரவையும் இக்குழுக்களின் உரிமைகளை மனித உரிமைகளாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தியும் அக்குழுக்களைப் பற்றிய தமது கொள்கையைக் கடந்த வருடம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது.

பால்நிலை சமத்துவ அடையாளங்கள் மற்றும் பாலியல் நோக்கு நிலைகள் என்பது பல்வேறு உயிரியல் மற்றும் சமூகவியல் காரணங்களால் ஏற்படும் வேறுபாடுகள் ஆகும். எனினும், இலங்கையில் அக்குழுக்கள் சமூகத்தின் பல இடங்களில் வன்முறை, பாகுபாடு மற்றும் ஓரங்கட்டலுக்கு உள்ளாகின்றன.

அத்துடன், சில காலனித்துவ சட்டங்கள், சில நிறுவன கட்டமைப்புகள், சில சமூக நிறுவனங்களின் பிற்போக்குவாத சிந்தனைகள் மற்றும் பிற்போக்கு கலாசார கருத்துக்கள்  காரணமாக, ஓரினபால் ஈர்ப்பு மற்றும் பால்நிலை மாற்றம் கொண்ட சமூகக் குழுக்களின் நீதிக்கான அணுகல் மறுக்கப்பட்டுள்ளது.

அனைவரும் ஒரே சமமாக நடாத்தப்படும் ஒரு நீதியான சமூகத்தில், எந்த ஒரு குழுவும் அவர்களின் அடையாளம் அல்லது பாலியல் நோக்கு நிலை காரணமாக ஓரங்கட்டப்படலாகாது. இவ்வாறு அவ்விஞ்ஞாபனம் கூறுகிறது.

இந்நிலையில், அரசாங்கம் LGBTQ சுற்றுலாத்துறை பற்றிய கருத்தை மறுத்தமை அதன் கொள்கைக்கு முரணானது என்ற சிலர் கூறுகின்றனர். ஆயினும், ஒரு குழுவின் உரிமைகளை  ஏற்றுக்கொள்வதும் அதன் செயற்பாடுகளை ஊக்குவிப்பதும் ஒன்றல்ல.

அதேவேளை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் எது இருந்தாலும் நாட்டு மக்களின் சமய உணர்வுகளைப் புண்படுத்துவது தமது இருப்பையே பாதிக்கும் என்பதை அரச தலைவர்கள் அறிந்திருக்கின்றனர் என்பதையே அரசாங்கத்தின் மறுப்பு அறிக்கைள் காட்டுகின்றன.

நன்றி tamilmirror

 

வர்த்தக‌ விளம்பரங்கள்