Paristamil Navigation Paristamil advert login

விஜய் மீது வழக்கு போட்டாலும் நிற்காது! அண்ணாமலை

விஜய் மீது வழக்கு போட்டாலும் நிற்காது! அண்ணாமலை

7 ஐப்பசி 2025 செவ்வாய் 11:31 | பார்வைகள் : 137


விஜய் மீது வழக்குப்போட்டு, அவரை குற்றவாளியாக சேர்த்தாலும் வழக்கு நிற்காது,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் அவர் அளித்த பேட்டி:

கரூர் சம்பவத்தில், விஜயை நீதிமன்றம் கண்டித்தது துரதிர்ஷ்டவசமானது. நீதிபதிகளை எப்போதும் குறை சொல்ல மாட்டோம்.

அரசியல் ஆசை இந்த வழக்கில் பயன்படுத்திய வார்த்தைகள், சமூக வலைதளத்தில் பேசு பொருளாகியுள்ளது.

கரூர் விவகாரத்தில், விஜய் மீது வழக்கு போட்டு, முதல் குற்றவாளியாக சேர்த்தாலும், அது நிற்காது. ஹைதராபாதில், நடிகர் அல்லு அர்ஜுன் வழக்கில் இதுவே நடந்தது.

அரசியல் ஆசைக்காக விஜயை கைது செய்யலாம்; சிறையில் அடைக்கலாம். மறுநாள் பெயிலில் வந்து விடலாம். யார் தவறு செய்தார்களோ, அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். த.வெ.க., நிர்வாகிகள் முதல் அதிகாரிகள் வரை, விசாரிக்கப்பட வேண்டும்.

வயிற்றெரிச்சல் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூட்டத்தில இப்படி நடந்திருந்தாலும், அவர் பொறுப்பல்ல. அவர் கட்சியில் இருந்து பலர் வெளியேறுவதால், வயிற்றெரிச்சலில், விஜய் பற்றியும், பா.ஜ., பற்றியும் தாக்கிப் பேசுகிறார்.

விஜய் மற்றும் த.வெ.க.,வை பாதுகாக்க வேண்டிய கடமை பா.ஜ.,வுக்கு கிடையாது. எந்த கட்சியாக இருந்தாலும், ஆளும்கட்சியால் நசுக்கப்படும்போது, உண்மையை சொல்கிறோம். அதற்காக, பா.ஜ., அடைக்கலம் கொடுக்கிறது என கூறுவது அபத்தம்.

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பது தொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, விதிமுறைகளை நிர்ணயிக்க வேண்டும்.

'தமிழ்நாடு யாருக்கு எதிராக போராடுகிறது' என கவர்னர் ரவி கேட்ட கேள்வி சரியே. கவர்னரை மாற்ற முடியுமா; அந்தப் பதவியை இல்லாமல் செய்து விட முடியுமா? மக்களை வேண்டுமென்றே துாண்டி விட்டு, போராட்ட மனநிலையை தி.மு.க., உருவாக்குகிறது. இது, ஆளும் கட்சி செய்ய வேண்டிய வேலை அல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்