Paristamil Navigation Paristamil advert login

நீதிபதிகள் மீதான விமர்சனங்களை புன்னகையுடன் புறந்தள்ள வேண்டும்; ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார்

நீதிபதிகள் மீதான விமர்சனங்களை புன்னகையுடன் புறந்தள்ள வேண்டும்; ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார்

7 ஐப்பசி 2025 செவ்வாய் 08:31 | பார்வைகள் : 182


ஒரு வழக்கில் தீர்ப்பு உத்தரவு பிறப்பித்ததற்காக, நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். நீதிபதிகளின் செயல்பாடுகளுக்கு சாயம் பூசப்படுகிறது. அதையெல்லாம் புன்னகையுடன் புறந்தள்ள வேண்டும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கூறினார்.

கரூரில், கடந்த மாதம் 27ல் நடந்த த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர்.

இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, 'த.வெ.க., தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு இல்லை' என, நீதிபதி என்.செந்தில்குமார் கருத்து தெரிவித்திருந்தார்.

நீதிபதியின் இந்த கருத்துக்கு, சமூக வலைதளங்களில் சிலர் ஆதரவாகவும், சிலர் அவதுாறு பரப்பும் விதமாகவும் கருத்துகள் தெரிவித்தனர். குறிப்பாக, நீதிபதியின் தாயார் வகித்த பதவி, கட்சி, நீதிபதி மகள் திருமண வீடியோ என, குடும்ப பின்னணியை குறிப்பிட்டு கருத்துகளை பதிவிட்டனர்.


இந்நிலையில், சமூக வலைதளங்களில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தனக்கு எதிராக பதிவிட்ட கருத்துகளை நீக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு தொடர்ந்திருந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறியதாவது:


சமூக வலைதளங்களில் யார் தான் விமர்சிக்கப்படவில்லை. ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்தற்காக, நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். ஏன் நீதிபதிகளின் கடந்த காலம், குடும்ப உறுப்பினர்கள் மீதும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

அரசியல் ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ, நிதி ரீதியாகவோ, உயர்ந்த நிலையை அடைந்த பின், இதுபோன்ற விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

நீதிபதிகளின் செயல்பாடுகளுக்கு, 'கலர் சாயம்' பூசப்படுகிறது. சமூக வலைதளங்களில், அவரவர்களுக்கு தேவையானதை எழுதுவர். நாம் அவர்களையும், அவர்கள் கூறும் கருத்துகளையும் புன்னகையுடன் எதிர்கொள்வதோடு, அவற்றை கவனத்தில் கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.

இதையடுத்து, 'ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டு குறித்து, மாதம்பட்டி ரங்கராஜ் ஆதாரங்களுடன் மறுக்க முடியுமா; அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளனவா; தொடர்புக்கான காரணங்களை மறுக்க முடியுமா' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர், ஜாய் கிரிசில்டா தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 22ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்