Paristamil Navigation Paristamil advert login

முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி

முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி

4 ஐப்பசி 2025 சனி 06:11 | பார்வைகள் : 100


கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டவிசாரணை ஆணையம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை தான் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில், முதல்வருக்கு ஏன் இத்தனை பதற்றம்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடிதம்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பாஜ தலைவர் நட்டா உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து இருந்தார். இக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜ எம்பி ஹேமமாலினி உள்ளிட்டோர் இடம்பெற்றனர். இதனிடையே, அனுராக் தாக்கூர், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அரசியல் ஆதாயம்

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்! என விமர்சித்து இருந்தார்.

என்ன தகுதி

இது தொடர்பாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சியில், திமுக சாராய வியாபாரிகள் விற்ற கள்ளச்சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோனதே. அவர்கள் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றீர்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? கொடுந்துயரத்திற்கு ஆளான வேங்கைவயல் மக்களைச் சென்று சந்தித்தீர்களா?

தங்கள் விவசாய நிலங்களைப் பாதுகாக்கப் போராடிய திருவண்ணாமலை மேல்மா விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டீர்கள். அவர்கள் தலைமைச் செயலகம் வந்த போது, சந்திக்க மறுத்து காவல்துறையினரை வைத்து கைது செய்தது ஏன்? தென்மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அல்லல்பட்டபோது, அவர்களுக்கு ஆறுதலாக இல்லாமல், இண்டிக் கூட்டணி கூட்டம்தான் முக்கியம் என டில்லிக்குப் போனது ஏன்?

ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி “Not reachable” மோடில் இருக்கும் உங்களுக்கு, பாஜவை விமர்சிக்கவோ, கேள்விகள் கேட்கவோ என்ன தகுதி இருக்கிறது?

கட்சி தொடங்கிய காலத்திலிருந்து, இதுவரை ஒரு தேர்தலைக் கூட தனித்து நின்று எதிர்கொள்ளத் துப்பு இல்லாத கட்சி திமுக. உங்கள் கோழைத்தனமான வரலாறு இப்படி இருக்கையில், வீண் சினிமா வசனங்கள் ஏன்?

கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் தான் விசாரணை ஆணையம் அமைத்துவிட்டீர்களே. எப்படி இருந்தாலும், இந்த விசாரணை ஆணையம் அமைத்தது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை தான் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில், உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம், “Not Reachable” முதல்வர் அவர்களே? இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்