இந்தியாவிலும் வன்முறையை துாண்ட முயற்சி; மோகன் பகவத் எச்சரிக்கை

3 ஐப்பசி 2025 வெள்ளி 14:00 | பார்வைகள் : 113
இலங்கை, வங்கதேசம், அதை தொடர்ந்து நேபாளம் என அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது சரியாகப்படவில்லை. வன்முறை எழுச்சியால் எதையும் சாதிக்க முடியாது; அராஜகம் மட்டுமே விளையும், என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கவலை தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளை போல, இந்தியாவிலும் பதற்றத்தை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயன்று வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம், 1925ல் விஜயதசமி நாளில் மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நிறுவப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியின் போது, நிறுவன நாளை அந்த சங்கம் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு நுாற்றாண்டு என்பதால், நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் களைகட்டி இருந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.
விஜயதசமி நாளில், ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் உரை இடம்பெறும். அந்த வகையில், இந்த ஆண்டு அதன் தலைவர் மோகன் பகவத் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாடு, பிற நாடுகளுடன் நட்பாக இருக்க வேண்டும். அதே வேளையில் தேச பாதுகாப்பு என வந்துவிட்டால், அதற்கே அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஒவ்வொரு கணமும் கவனமாகவும், கண்காணிப்புடனும், வலுவாகவும் இருக்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின், நம் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட நாடு எது; நட்பு பாராட்டும் நாடு எது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், மதத்தை கேட்டு, 26 இந்தியர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் மிகுந்த மனவலியை தந்தது. இந்த தாக்குதலுக்கு நம் அரசு தக்க பதிலடியை கொடுத்துவிட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் நம் ராணுவத்தின் வீரமும், சமூகத்தின் ஒற்றுமையும் வெளிப்படையாகவே தென்பட்டது.
கவனம் தேவை
அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது நல்லதல்ல. இலங்கை, வங்கதேசம், சமீபத்தில் நேபாளம் என நம் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவை அனைத்தும் மக்களின் ஆவேசத்தால் நடந்தவை.
இந்தியாவிலும் அப்படியொரு அசம்பாவிதத்தை நிகழ்த்த, நம் நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் சில சக்திகள் முயன்று வருகின்றன. வன்முறை எழுச்சியால் எதையும் சாதிக்க முடியாது. அராஜகத்தில் தான் முடிவடையும்.
அசாதாரண சூழல், வெளிநாட்டு சக்திகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும். இதனால், நாமும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
தலைவர்கள் மக்களிடம் இருந்து விலகிச் செல்வது அதிருப்தியை வளர்த்து விடும். வங்கதேசத்திலும், நேபாளத்திலும் நிகழ்ந்த சம்பவங்களால் யாருக்கும் எந்த பலனும் ஏற்படவில்லை.
வன்முறை எழுச்சிகளால் மாற்றம் ஏற்படாது. அப்படி மாற்றம் ஏற்பட்டால், அது அராஜகத்தின் இலக்கணமாகிவிடும் என டாக்டர் அம்பேத்கர் தெரிவித்து இருக்கிறார். முற்போக்கான நாடுகள், ஒழுக்கமான வழிமுறைகள் வாயிலாக இலக்கை அடைய தவறும்போது, அதன் சொந்த பலம் ஓரம்கட்டப்படுகிறது. அண்டை நாடுகளில் குறிப்பாக நேபாளத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடிப்பது, உள்நாட்டு பாதுகாப்பை கடந்து இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனெனில், கடந்த காலங்களில் அந்த பிராந்தியம் நம்முடையதாக இருந்தது. இந்த உணர்வுபூர்வமான பிணைப்பு தான் நேபாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு, நம்மையும் கவலை அடைய
வைத்திருக்கிறது.
தீய அலை
தீய மற்றும் எதிர்ப்பு சித்தாந்தங்கள் கொண்ட புதிய அலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச நாடுகளில் சமூக உறுதியற்ற தன்மை மற்றும் சீர்குலைவை
ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலக நாடுகள் தங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய இவை துாண்டிவிடுகின்றன. இந்த அலை இந்தியாவிலும் பரவ முயற்சி எடுத்து வருகிறது. சமூக விரோத சக்திகளான நக்சல் இயக்கம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. அதற்கு காரணம் அந்த இயக்கத்தின் குரூரம். அதனால், சமூகம் அந்த இயக்கத்தை நிராகரித்து விட்டது. அரசும், பாதுகாப்பு படைகளும், அந்த இயக்கத்தை வேரோடு அகற்றும் நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
சுதேசி, தற்சார்பு முக்கியம்
அமெரிக்கா புதிய வரி கொள்கையை வகுத்துள்ளது. சொந்த நாட்டு மக்களின் நலனுக்காக அந்த கொள்கை வகுக்கப்பட்டாலும், ஒவ்வொருவரையும் பாதித்து வருகிறது. எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. ஒன்றுக்கொன்று சார்ந்து அல்லது துாதரக நம்பிக்கைகள் மூலம் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.
அதே சமயம் ஒரு நாட்டை சார்ந்து இருப்பது என்பது கட்டாயமாகக் கூடாது. நாம் தற்சார்புடன் வாழ்வது அவசியம். அரசியல், பொருளாதாரம் மற்றும் துாதரக ரீதியிலான உறவுகள் தேவைக்காக இருக்கக்கூடாது. விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். சுதேசி மற்றும் தற்சார்புக்கு மாற்றாக எதுவும் கிடையாது.
நம் நாடு முழுதும் இளைஞர்களிடையே தேசிய உணர்வு, நம்பிக்கை, கலாசாரத்தின் மீது ஈடுபாடு வளர்ந்து வருகிறது. ஸ்வயம் சேவகர்கள் மட்டுமின்றி, பல்வேறு மதத்தினர், சமூக அமைப்புகள், தனிநபர்களும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு தன்னலமின்றி சேவையாற்ற முன் வருகின்றனர்.
வசுதைவ குடும்பகம்
ஹிந்து சமூகம் அனைவரையும் உள்ளடக்கிய உள்ளார்ந்த சமூகம். பிரித்து பார்க்கும் மனநிலை ஹிந்து சமூகத்திடம் இல்லை. 'வசுதைவ குடும்பகம்' என்ற, 'உலகமே ஒரு குடும்பம்' என்ற சித்தாந்தத்தை காத்து வருவதும் ஹிந்து சமூகம் தான். தேசிய வளர்ச்சிக்கு சமூகத்தின் ஒற்றுமை மிகவும் முக்கியம். அதுவும் பன்மொழிகள், மதங்கள், வாழ்க்கை முறைகள் என நிறைய வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவுக்கு மிகவும் அவசியம்.
அனைவரையும் வரவேற்பது தான் பாரத பாரம்பரியம். எனவே, பாரதத்திற்கு வரும் அனைவரையுமே அன்னியர்களாக நாம் பார்ப்பதில்லை. அதே சமயம் தனித்துவ அடையாளங்களால் பிரிவினை ஏற்பட்டு விடக் கூடாது. சமூகம், கலாசாரம், நாடு போன்ற மிகப் பெரிய அடையாளமே மிகவும் உயர்ந்தது.
சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். உலகளாவிய பருவநிலை மாறுபாட்டால் இமயமலையில் மோசமான விளைவுகள் தீவிரமடைந்து இருக்கின்றன. அளவுக்கு அதிகமாக மழை பெய்கின்றன. நிலச்சரிவு, உருகும் பனிமலைகள் ஆகியவை சுற்றுச்சூழலை பேணி காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1