Paristamil Navigation Paristamil advert login

பெரிய இடம் கொடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது: தேஜ கூட்டணி எம்பிக்கள் குழு பேட்டி

பெரிய இடம் கொடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது: தேஜ கூட்டணி எம்பிக்கள் குழு பேட்டி

1 ஐப்பசி 2025 புதன் 06:14 | பார்வைகள் : 186


விஜய் பிரசாரத்துக்கு பெரிய இடம் கொடுத்து இருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது,'' என கரூரில் தேஜ கூட்டணி எம்பிக்கள் குழு நிருபர்கள் சந்திப்பில் ஹேமமாலினி தெரிவித்தார்.

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்தனர். ஹேமமாலினி தலைமையிலான அக்குழுவினர், அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர் தே.ஜ., கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் கூட்டாக நிருபர்களை சந்தித்து பேசினர்.

அப்போது தே.ஜ., கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவில் உள்ள பாஜ., எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவத்தின் போது போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை அரசு விளக்க வேண்டும். சம்பவ இடத்திற்குச் சென்றபோது எங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பெரிய இடம் ஒதுக்கியிருந்தால் இது நடந்திருக்காது. எங்கள் அறிக்கையை வார இறுதிக்குள் பாஜ தலைமையிடம் அளிப்போம். 300 பேர் நிற்க முடியாத இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். ஏற்பாட்டாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

குழுவின் தலைவர் பாஜ எம்பி ஹேமமாலினி நிருபர்களிடம் கூறியதாவது: என்ன நடந்தது என்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து உள்ளோம். பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயம் இல்லை. விஜயை பார்க்கவே பெண்கள், சிறுமிகள் என பலரும் வந்துள்ளனர். பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது.

கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினோம். அரசியல் வரலாற்றில் இது போன்ற விபத்து இதுவரை நடந்ததில்லை. தவெகவினர் சிறிய இடத்தை கேட்டிருந்தாலும் அரசு பெரிய இடத்தை தந்திருக்க வேண்டும். இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்