இந்தியாவில் முஸ்லீம் கிரிக்கெட் வீரர்கள் குறிவைக்கப்படுகிறார்களா? ஷமி கொடுத்த விளக்கம்

28 ஆவணி 2025 வியாழன் 20:19 | பார்வைகள் : 115
இந்தியாவில் முஸ்லீம் கிரிக்கெட் வீரர்கள் குறிவைக்கப்படுகிறார்களா என்ற கேள்விக்கு முகமது ஷமி விளக்கமளித்துள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இதுவரை 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 206 விக்கெட்களும், 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்களும் கைப்பற்றியுள்ளார்.
இருந்தாலும் அடிக்கடி, சமூகவலைத்தளத்தில் ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். 2021 T20 உலகக்கோப்பையில், இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த போது, துரோகி, தேச விரோதி என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், இந்தியாவில் முஸ்லீம் கிரிக்கெட் வீரர்கள் வேறு விதமாக நடத்தப்பட்டார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "இது போன்ற ட்ரோல்களில் நான் கவனம் செலுத்துவதில்லை. எனக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. நான் இயந்திரம் இல்லை. ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்தால், சில நேரங்களில் வெற்றி பெறுவோம் சில நேரங்களில் தோல்வி அடைவோம்.
மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது அவர்களது விருப்பம். நாட்டிற்காக விளையாடும் போது இதையெல்லாம் மறந்துவிடுவீர்கள். விக்கெட் வீழ்த்துவதும், போட்டியில் வெற்றிபெறுவதுமே முக்கியமானதாகிவிடும். இது போன்ற நேரங்களில் சமூகவலைத்தளத்திற்கு வரமாட்டேன். நீங்கள் நேர்மறை மற்றும் எதிர்மறையான விடயங்களை பார்க்கக்கூடும். போட்டி நேரங்களில் இதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
வெற்றி பெற நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். ட்ரோல் 2 வரிகளை டைப் செய்வதில் முடிந்து விடும். உண்மையான ரசிகர்கள் ஒருபோதும் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள்.
உங்களுக்கு ஆட்சேபணை இருந்தால் கூறலாம் ஆனால் அது மரியாதையான வகையில் இருக்க வேண்டும். நீங்கள் என்னை விட சிறப்பாக விளையாட முடியும் என நினைத்தால் வந்து விளையாடுங்கள் என தெரிவித்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.