Paristamil Navigation Paristamil advert login

பான் இந்தியா படங்கள் வரமா? சாபமா?

பான் இந்தியா படங்கள் வரமா? சாபமா?

28 ஆவணி 2025 வியாழன் 12:14 | பார்வைகள் : 186


பல தசாப்தங்களாக, இந்திய சினிமா பல பிரிவுகளை கொண்ட ஒன்றாக இருந்து வருகிறது. மும்பையின் பாலிவுட், ஹைதராபாத்தின் டோலிவுட், சென்னையின் கோலிவுட், பெங்களூருவின் சாண்டல்வுட் மற்றும் கேரளாவின் மாலிவுட் ஆகியவை தனித்துவமான பாணி, கதைக்களம் மற்றும் பார்வையாளர்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், 'பாகுபலி' வெளியான பிறகு, இந்திய சினிமாவின் நிலைமை மாறிவிட்டது. 'பான்-இந்தியா' வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல் வெற்றிக்கான தாரக மந்திரமாக மாறியுள்ளது.

இன்று, பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்கள் தென்னிந்திய ஹீரோக்களுடன் கைகோர்த்து, இந்திய சினிமாவில் புது டிரெண்டை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த கூட்டு முயற்சிகள் சில வெற்றிகரமாகவும், சில எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமலும் உள்ளன. உதாரணத்திற்கு ஷாருக்கான் மற்றும் கோலிவுட் இயக்குனர் அட்லீ இணைந்த 'ஜவான்' இந்தி சினிமா வரலாற்றில் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதேபோல், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் மற்றும் ஷங்கர் ஆகியோரின் '2.0' பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

இருப்பினும், ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் NTR போன்ற இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்த 'வார் 2' பான்-இந்தியா அளவில் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறியது. மறுபுறம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது தனித்துவமான சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) மூலம் பான் இந்தியா நட்சத்திரங்களை கவர்ந்திருக்கிறார். அண்மையில் கூலி படத்தில் ஆமிர்கான் நடித்தது மட்டுமின்றி தன்னுடைய அடுத்த படத்தையும் லோகேஷிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

பாலிவுட் தெற்கு நோக்கி திரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. தென்னிந்திய இயக்குனர்கள் 'RRR', 'KGF', 'புஷ்பா' போன்ற பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட படங்களை வழங்குகிறார்கள். பார்வையாளர்கள் இப்போது மொழி தடைகளைத் தாண்டி நல்ல கதையம்சத்துடன் படம் வந்தால் ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும், தென்னிந்திய படங்கள் வட இந்தியாவில் பாலிவுட் படங்களை விட அதிக வசூல் செய்கின்றன, இது இந்த கூட்டு முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது.

தீபிகா-அல்லு அர்ஜுன் அல்லது ஆமிர்-லோகேஷ் கனகராஜ் போன்ற புதிய ஜோடிகள் பார்வையாளர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன, இது படத்தின் வெற்றிக்கு உதவுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த கூட்டு முயற்சிகளின் புதிய அத்தியாயம் இந்திய சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்