பிரித்தானியாவில் வறட்சியால் இறைச்சி உற்பத்தி பாதிக்கும் அபாயம்

28 ஆவணி 2025 வியாழன் 10:57 | பார்வைகள் : 204
பிரித்தானியாவில், வறட்சி காரணமாக இறைச்சி உற்பத்தி பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
கடந்த நூறு ஆண்டுகளில் முதன்முறையாக ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்தில் போதுமான மழை இல்லை, வெப்பம் அதிகமாக நிலவியது.
அதன் விளைவாக நிலத்தில் போதுமான அளவில் புல் முளைக்கவில்லை. மக்கள், இது இங்கிலாந்துதானா, இங்கு இப்படி ஒரு வறட்சியான நிலை உருவானது இல்லையே என வியக்கிறார்கள்.
இங்கிலாந்தில் கால்நடைகள் மேய்வதற்கு போதுமான புல் இல்லாததால், விவசாயிகள் கூடுதல் செலவு செய்து அவற்றிற்கு உணவளிக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வழக்கமாக, குளிர் காலத்துக்காக விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு உணவு சேகரித்துவைப்பார்கள்.
தற்போது போதுமான மழை இல்லாததால், போதுமான புல் வளராததால், குளிர் காலத்துக்காக சேர்த்துவைத்திருந்த உணவை எடுத்து இப்போதே கால்நடைகளுக்கு பயன்படுத்தவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அத்துடன், அவற்றிற்கு போதுமான சத்துள்ள உணவு கிடைப்பதை உறுதி செய்ய, silage என்னும் பதப்படுத்தபட்ட உணவு, வைக்கோல் மற்றும் தானியங்கள் கலந்த உணவை நாளொன்றிற்கு இரண்டுமுறை கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் செலவு அதிகமாகிறது.
ஆக இவ்வளவு செலவு செய்தும் கால்நடைகளை இறைச்சிக்காக கிடைக்கும் தொகை லாபத்தைக் கொடுக்குமா என்பதையும் சொல்லமுடியாது.
அத்துடன், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், பிரித்தானியாவின் உணவு பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே உணவுப்பொருட்கள் விலை 4.9 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், அது மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடயம் என்னவென்றால், இப்படி கால்நடைகளை வளர்க்க செலவு அதிகரிப்பதால், சில விவசாயிகள் தங்கள் மந்தையின் அளவைக் குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
அதாவது, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க இருக்கிறார்கள்.
அது இறைச்சி உற்பத்தியையும் பாதிக்கும். ஆக, பிரித்தானியாவில் வறட்சியால் இறைச்சி உற்பத்தி பாதிக்கும் அபாயமும், உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.