ட்ரம்பின் வர்த்தக யுத்தம் - இந்தியா எப்படி சமாளிக்கும்...?

20 ஆவணி 2025 புதன் 17:32 | பார்வைகள் : 137
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அதிக வரி விதித்திருப்பது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் 25% ஆக இருந்த வரி தற்போது 50%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் சவாலாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்திய அரசு மற்றும் வல்லுநர்கள் இந்த நிலையை பல்வேறு வழிகளில் சமாளிக்க முடியும் என கருதுகின்றனர்.
வர்த்தகப் போரின் பின்னணி
அமெரிக்காவின் இந்த வரிவிதிப்புக்கு முக்கிய காரணம், இந்தியாவுடன் அமெரிக்காவிற்கு உள்ள வர்த்தகப் பற்றாக்குறையாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதனையும் உலகளாவிய விடயங்கள் இதில் செல்வாக்கு செலுத்துகின்றன (trade deficit). இந்தியா ஆண்டுக்கு சுமார் 87 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதேசமயம் அமெரிக்காவில் இருந்து 41 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்கிறது. இந்த வர்த்தக ஏற்றத்தாழ்வை சரிசெய்யும் நோக்கில் ட்ரம்ப் இந்த வரிகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த வரிவிதிப்பு ஒரு அநீதியான செயல் என்று இந்தியா கருதுகிறது. ஏனென்றால், இந்தியா நீண்டகாலமாக அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உறவை பராமரித்து வருகிறது. இந்தியாவின் பல ஏற்றுமதிப் பொருட்கள், குறிப்பாக ஆடை, ஆபரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள், அமெரிக்காவின் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வர்த்தகம், அமெரிக்காவின் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. இவ்வாறு அமெரிக்காவினால் விதிக்கப்படும் இந்த வரி, அமெரிக்காவில் உள்ள இந்தியப் பொருட்களின் விலையை உயர்த்தி, நுகர்வோரை பாதிக்கும்.
இந்தியாவின் எதிர்வினைகள்
அமெரிக்காவின் இந்த வரிவிதிப்புக்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. இந்திய அரசு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விதித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒரு பலமான நிலையை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் இராஜதந்திரிகள், அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்த வர்த்தகப் போர் குறித்த தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இது ஒரு தற்காலிகமான நிலை என்றும், பேச்சுவார்த்தை மூலம் இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
“இந்த விவகாரம் வெறும் வர்த்தகப் போர் அல்ல, ஆனால் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் சார்ந்த ஒரு செயல்பாடு என்று குறிப்பிடுகிறார் சர்வதேச ஆய்வாளர் சம்பிக்க ரணவக்க.
‘’இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் யாரும் எதிர்பார்க்காத முடிவுகளை எடுப்பதில் வல்லவர். எனவே, இந்த வரிவிதிப்பு அவரது அரசியல் பாணியின் ஒரு பகுதி. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்று குறிப்பிடுகிறார் சம்பிக்க ரணவக்க.
இந்தியாவின் வலுவான பொருளாதார நிலை
இந்த வர்த்தகப் போரை சமாளிக்க இந்தியாவின் பொருளாதார வலிமை பெரிதும் உதவும். இந்தியா தற்போது நான்காவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது, விரைவில் ஜெர்மனியையும் கடந்து மூன்றாவது இடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த வளர்ச்சி, அமெரிக்காவின் வரிவிதிப்பு ஏற்படுத்தக்கூடிய உடனடி தாக்கத்தை சமாளிக்க உதவும்.
இந்தியா 2024ஆம் ஆண்டில் 4.11 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருந்தது. இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் 2023-24 நிதி ஆண்டில் 1.6 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இந்த புள்ளிவிபரங்கள் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன. தற்போதைய நிலையில் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருவதால், அமெரிக்கா உட்பட எந்தவொரு நாடும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது.
மாற்று வர்த்தக கூட்டணிகள்
மறுபுறம் அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு, இந்தியா தனது வர்த்தக உறவுகளை மாற்று ரீதியில் பலப்படுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர். மேலும், ரஷ்யா-இந்தியா-சீனா (RIC) போன்ற புதிய கூட்டணிகளை உருவாக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டணிகள் அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவுடன் இந்தியாவின் உறவு
தற்போது அமெரிக்கா இந்தியாவுக்கு வரி விதித்துள்ளமைக்கான முக்கிய காரணம் இந்தியா ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்வதாகும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ரஷ்யாவுடனான உறவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா தனது எரிபொருள் தேவைகளில் 88% வீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது, இதில் ரஷ்யாவின் பங்கு 30% ஆகும். ரஷ்யா, உலக சந்தை விலையை விட குறைவான விலையில் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு வழங்குகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் நன்மையாகும். அமெரிக்கா இந்த உறவை விரும்பவில்லை என்றாலும், இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்புக்கு இந்த உறவு அத்தியாவசியமானது. நேரு காலம் முதல் நீடித்து வருகிறது இந்த இந்திய - ரஷ்ய உறவு,
பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம்
எப்படியிருப்பினும் இந்த வர்த்தகப் போரினால் இரு நாடுகளும் பாதிப்படையும். அமெரிக்காவில் இந்தியப் பொருட்களின் விலை உயரும் போது, நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். அதேபோல, இந்தியாவில் அமெரிக்கப் பொருட்களின் விலை உயரும் போது, இந்திய நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாது. இலங்கை மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த வரிகளை பேச்சுவார்த்தை மூலம் குறைத்தது போல, இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு சுமூகமான தீர்வை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே இன்னும் இரண்டு வாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்திய தாக்கம்
இந்த வர்த்தகப் போர் இந்தியாவின் அண்டை நாடுகளையும் பாதிக்கும். இலங்கை போன்ற நாடுகள் இந்தியாவுடன் நெருங்கிய வர்த்தக உறவைக் கொண்டுள்ளன. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்கா வரி விதிக்கும் போது, அது இந்தியாவின் ஏற்றுமதித் திறனை குறைக்கும், இது இலங்கையின் பொருளாதாரத்திலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது, இந்தியா மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. இலங்கை வருடம் ஒன்றுக்கு இந்தியாவிடம் இருந்து சமார் 4000 மில்லியன் டொலர்களுக்கு இறக்குமதி செய்கிறது. மறுபுறம் 800 மில்லியன் டொலர்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. இலங்கையின் சர்வதேச வர்த்தகத்தில் இதுபெரிய நிலையாகும்.
மொத்தத்தில், ட்ரம்ப் - மோடி வர்த்தகப் போர் என்பது ஒரு சிக்கலான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு விவகாரமாகும். இந்த நிலை இந்தியாவின் பொருளாதாரத்திற்கு சவாலாக இருந்தாலும், இந்தியா தனது வலுவான பொருளாதார வளர்ச்சி, ராஜதந்திர உறவுகள் மற்றும் மாற்று வர்த்தக கூட்டணிகள் மூலம் இதை சமாளிக்க வேண்டியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் ஒரு நியாயமான தீர்வை எட்டுவது, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை மீட்டெடுக்கவும், உலக பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை பராமரிக்கவும் உதவும். எனவே விரைவில் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் அவசியமாகவுள்ளது.
நன்றி virakesari
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1