பரிஸ் அல்டி கடையில் €50,000 கொள்ளை: இரு பெண் ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர்!!

18 ஆவணி 2025 திங்கள் 14:55 | பார்வைகள் : 706
பரிஸ் 10வது வட்டாரத்தில் உள்ள அல்டி (Aldi) கடையில், ஞாயிறு காலை 7 மணியளவில் இருவர் கத்தியுடன் நுழைந்து, இரண்டு பெண் ஊழியர்களை மிரட்டி, அவர்களை பணப்பெட்டி அறைக்கு அழைத்து சென்று சுமார் 50,000 யூரோக்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
கடை ஊழியர்கள் இருவரையும் ஒட்டும் தன்மையுள்ள டேப்பால் கட்டி விட்டு, காலை 7:40 மணிக்கு ஒரு டாக்ஸியில் தப்பிச் சென்றுள்ளனர். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு காலை 10 மணியளவில், பாதுகாப்பு ஊழியர் கடை திறக்கப்படாமல் இருப்பதை கவனித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். காவல் துறையினர் வந்து, ஊழியர்களை கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.
ஒரு ஊழியர் படிக்கட்டில் விழுந்ததால் முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவும், அறிவியல் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.