தோனி ஏன் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க மாட்டார்...

18 ஆவணி 2025 திங்கள் 13:47 | பார்வைகள் : 115
தோனி ஏன் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க மாட்டார் என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.
கம்பீரின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் 14 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து, பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளரை மாற்றும் முடிவில் பிசிசிஐ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வியும் பலரிடம் எழுந்துள்ளது.
முன்னாள் வீரர் புஜாராவிடம் இது குறித்து கேட்ட போது, "கிரிக்கெட் குறித்த ஆழமான அறிவு, சமயோசிதமாக முடிவெடுக்கும் திறன், ஆட்ட நுணுக்கங்களை புரிந்து கொள்வது போன்ற திறன் உள்ளதால் அஸ்வின் பொருத்தமாக இருப்பார்" என கணிப்பு தெரிவித்துள்ளார்.
இதே போல், எம்.எஸ்.தோனி அடுத்த தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "அது ஒரு பெரிய விடயம். அதில் அவருக்கு ஆர்வம் இல்லை என நினைக்கிறேன். பயிற்சியாளர் பணி என்பது கடினமான ஒன்று. விளையாடும் போது இருந்ததை விட அதிக பிஸியாக வைத்திருக்கும்.
உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கும். நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையை செய்து விட்டு, பயணப்பெட்டியுடன் வாழ்ந்து விட்டு இந்த வேலையை செய்ய விரும்ப மாட்டீர்கள்.
இதன் காரணமாகவே பல வீரர்கள் பயிற்சியாளர் பணிக்கு வர விரும்புவதில்லை. அப்படியே வந்தாலும், ஐபிஎல் போன்ற 2 மாதம் நடைபெறும் தொடருக்கு தான் வருவார்கள்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாராக இருந்தால், ஆண்டுக்கு 10 மாதத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டி இருக்கும். தோனிக்கு அவ்வளவு நேரம் இருக்குமா என தெரியாது. அப்படி இருந்தால் ஆச்சரியப்படுவேன்." என தெரிவித்துள்ளார்.