Paristamil Navigation Paristamil advert login

போதைப்பொருள் கடத்தல் - சிறுவர்களுக்கான ஊரடங்கு முடிவடைகிறது – இந்த நடவடிக்கை நிரந்தரப்படுத்தப்படுமா?

போதைப்பொருள் கடத்தல் - சிறுவர்களுக்கான ஊரடங்கு முடிவடைகிறது – இந்த நடவடிக்கை நிரந்தரப்படுத்தப்படுமா?

18 ஆவணி 2025 திங்கள் 11:24 | பார்வைகள் : 467


போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பான வன்முறைகளுக்கு பதிலளிக்கும் வகையில், Gard மாகாணத்தின் Nîmes நகரம் ஜூலை 21 திங்கட்கிழமை முதல் சில பகுதிகளில் சிறுவர்களுக்கான ஊரடங்கினை அறிவித்திருந்தது. சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர், அது இன்று ஓகஸ்ட் 18 அன்று நிறைவடைகிறது.

Nîmes இத்தகைய நடவடிக்கையை அறிவித்த முதல் நகரங்களில் ஒன்றாகும். ஜூலை 21 முதல், மாநகராட்சி சிறுவர்கள் தனியாக இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை நகரின் மிகுந்த பதற்றமானபகுதிகளில் வெளியில் செல்வதைத் தடைசெய்திருந்தது. நகராட்சி குறிப்பிட்டபடி, “துப்பாக்கிச் சூடுகள், பழிவாங்கல்கள், கும்பல் மோதல்கள்” போன்ற சூழ்நிலைகளால் ஊரடங்கு அவசியமானதாகக் கருதப்பட்டது.

16 வயதிற்கு குறைவான சிறுவர்களை குறிவைத்த இந்த ஊரடங்கு, Pissevin, Mas de Mingue, Chemin-Bas, Valdegour ஆகிய நான்கு முக்கியக் குடியிருப்பு பகுதிகளில் நடைமுறைக்கு வந்தது. இது ஓகஸ்ட் 1 அன்று மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், தற்போது புதிதாக நீட்டிக்கப்படவில்லை.

கடந்த சில வாரங்களில், Nîme காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை வலுப்படுத்தினர். ஓகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஒரு பெரிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, 645 பேர் மற்றும் 447 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. இதற்கு CRS படையினரும் உதவினர்.

போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்டதுடன், போதைப்பொருள் வைத்திருந்ததற்காக ஆறு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது; மேலும் பத்து பேர் கைது செய்யப்பட்டனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மாநகராட்சி, இந்த ஊரடங்கின் நோக்கம் தண்டனை விதிப்பது அல்ல என்று வலியுறுத்தியது. நகரபிதா Jean-Paul Fournier விளக்குகையில், இது “சிறுவர்களை பாதுகாப்பதும், அவர்கள் வன்முறைகளுக்கு ஆளாகாமல் தடுப்பதாகும்.” என்றார்.

பிற நகரங்களும் இதே மாதிரியான முடிவுகளை எடுத்துள்ளன

Nîmes மட்டும் அல்லாமல், பிரான்சின் பல நகரங்கள் சிறுவர்களுக்கான ஊரடங்கை அறிமுகப்படுத்தியுள்ளன. ஜூலை தொடக்கத்தில், உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ, நகரபிதாக்களை வகுப்புகள் முடிந்தவுடன் இத்தகைய ஊரடங்குகளை அறிமுகப்படுத்த ஊக்குவித்தார். Carpentras (Vaucluse), Béziers (Hérault), Triel-sur-Seine (Yvelines), Villecresnes (Val-de-Marne), Saint-Ouen (Seine-Saint-Denis) போன்ற நகரங்களும் இதே நடவடிக்கையை எடுத்துள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்