பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

17 புரட்டாசி 2025 புதன் 16:08 | பார்வைகள் : 172
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள நிலையில், அவரை அவமதிக்கும் விடயம் ஒன்று நடந்துள்ளது.
பிரித்தானியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ட்ரம்பும் பிரபல அமெரிக்க குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனும் இணைந்திருக்கும் படங்கள், விண்ட்சர் மாளிகையின் சுவரில் காட்சிகளாக திரையிடப்பட்டன.
அமெரிக்க கோடீஸ்வரரான இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவராவார்.
அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ட்ரம்பும் அவரது மனைவியும் நிற்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கின. அந்த விடயத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ட்ரம்ப் எவ்வளவோ முயன்றும் ஊடகங்களும் பிரச்சார அமைப்புகளும் அவரை விடுவதாக இல்லை.
இந்நிலையில், டாங்கீ குரூப் என்னும் அமைப்பொன்று ட்ரம்ப் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் நிற்கும், நடனமாடும் காட்சிகளையும், அது குறித்து செய்தித்தாள்களில் வெளியான சில செய்திகளையும் விண்ட்சர் மாளிகையின் சுவரில் காட்சிகளாக திரையிட்டுள்ளது.
மேலும், ட்ரம்ப் பிரித்தானியா வருவதற்கு முன்பே, Everyone Hates Elon என்னும் அமைப்பு ட்ரம்பும் எப்ஸ்டீனும் இணைந்திருக்கும் பிரம்மாண்ட போஸ்டர் ஒன்றை விண்ட்சர் மாளிகைக்கு வெளியே தரையில் காட்சியாக்கியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விண்ட்சர் மாளிகையின் சுவரில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ட்ரம்ப் குறித்த காட்சிகளை காட்சிப்படுத்தியதற்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இன்னமும் ஏராளம்பேர் ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ட்சர் மாளிகையின் முன் கூடியுள்ளார்கள். ஆக, மேலும் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் எதிர்பார்க்கலாம் என கருதப்படுகிறது.