மோடிக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் டிரம்ப்

17 புரட்டாசி 2025 புதன் 12:18 | பார்வைகள் : 128
இன்று 75வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதிபர் டிரம்பின் அபரிமிதமான வரி விதிப்பு கொள்கையால், இந்தியா - அமெரிக்கா உறவில் சமீபத்தில் கசப்புணர்வு ஏற்பட்டது. இந்நிலையில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான நேர்மறையான வர்த்தகப் பேச்சு நேற்று துவங்கியது. இந்த பேச்சு துவங்கிய சில மணிநேரங்களுக்குப் பின், டிரம்ப் - மோடி இடையே போன் உரையாடல் நடந்தது.
இது குறித்த தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, அதிபர் டிரம்புக்கு நன்றியை தெரிவித்துள்ளார். அதில், ''எனது நண்பர் அதிபர் டிரம்ப் அவர்களே... எனது 75வது பிறந்தநாளில் உங்கள் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்களைப் போலவே, நானும் இந்தியா - -அமெரிக்கா இடையே விரிவான மற்றும் உலகளாவிய நட்புறவை, புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதில் உறுதியாக உள்ளேன்,'' என தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போருக்கு அமைதியான தீர்வு காண டிரம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.
வரி விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியா அமெரிக்க இடையே எதிர்மறை கருத்துக்கள் எழுந்தன, , 'நான் எப்போதுமே மோடியுடன் நண்பராக இருப்பேன்' எனக் கூறினார் டிரம்ப். இதற்கு, டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவ தாக பிரதமர் மோடி பதில் அளித்தார்.
இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் டிரம்ப்