Paristamil Navigation Paristamil advert login

ஹைதராபாத்தில் சாலையில் பாய்ந்தோடிய வெள்ளம்; 3 பேர் மாயம்

ஹைதராபாத்தில் சாலையில் பாய்ந்தோடிய வெள்ளம்; 3 பேர் மாயம்

15 புரட்டாசி 2025 திங்கள் 15:25 | பார்வைகள் : 105


ஹைதராபாத்தில் பெய்த தொடர் கனமழையால் சாலையில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் பொதுமக்கள் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். மாயமான அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

மேகவெடிப்பு காரணமாக ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அதிகபட்சமாக, சித்திப்பேட்டையில் 24.50 செமீ மழை பதிவாகியுள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்தில் 12.8 செமீ மழையும், முஷிராபாத்தில் 11.40 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

இந்த திடீர் கனமழை காரணமாக, பார்சிகுட்டா பகுதியில் உள்ள சாலையில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சன்னி என்ற வாகன ஓட்டி, தனது பைக்குடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது பைக் மீட்கப்பட்ட நிலையில், சன்னியை காணவில்லை. பாதாள சாக்கடை குழிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் அவரை தேடி வருகின்றனர்.

இதேபோல, அர்ஜூன்,26, ராமா,28 ஆகிய இருவரும் நம்பள்ளி பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதனிடையே, பஞ்சாரா மலையில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில், தனிப்பட்ட முறையில் வெள்ள நிலவரத்தைக் கண்காணித்து வருவதாக ஹைதராபாத் மாநகராட்சி மேயர் விஜயலட்சுமி காட்வால் தெரிவித்தார். மேலும் வெள்ளநீரை அகற்றவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்