பிரெஞ்சு போலினேசியாவில் சுனாமி எச்சரிக்கை!!

30 ஆடி 2025 புதன் 14:48 | பார்வைகள் : 885
பசிபிக் கடலில் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு, பிரெஞ்சு போலினேசியாவின் (Polynésie française) மார்கிசஸ் (Marquises) தீவுகளுக்கு நான்கு மீட்டர் உயரம் வரை அலைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதைத் தொடர்ந்து யுா ஹுகா (îles Ua Huka), நுகு ஹிவா (Nuku Hiva) மற்றும் ஹிவா (Hiva) ஆகிய தீவுகளில் உள்ள சுமார் 6,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தீவுகள் உயரமானவை என்பதால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதில் எந்த சிக்கலுமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போலினேசியா பகுதியில் வழக்கமான அபாயமாகவே காணப்படும் ஒன்று என்பதால், மக்களுக்கு அடிக்கடி பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறான ஒரு நிகழ்வுக்கான பயிற்சி கடந்த ஜூனில் நுகு ஹிவாவில் நடைபெற்றது.
எதிர்பார்க்கப்படும் அலையில் சீற்றம் குறைந்த பிறகு எச்சரிக்கையை மெதுவாகத் தளர்த்தி, வியாழன் காலை (பிரெஞ்சு போலினேசிய நேரப்படி) முழுமையாக நீக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.