ரஜினி உலகம் முழுவதும் பிரபலமடைந்தது எப்படி?

15 ஆவணி 2025 வெள்ளி 13:58 | பார்வைகள் : 182
காந்தப் பார்வை, வேகமான நடை, இயல்பான ஸ்டைல் என தனித்துவத்துமான திறன்களால் தமிழ் சினிமாவை தாண்டி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் ரஜினிகாந்த். அவரது திரைப்பயண வெற்றியில் முக்கிய பங்காற்றிய தனித்துவங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
1975 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, சினிமாவில் கதாநாயகன் ஆவதற்கு வெள்ளைத் தோல், கட்டுடல், அடர்த்தியான தலைமுடி தேவை என இருந்த எழுதப்படாத விதிகளை மாற்றிய எழுதியவர் ரஜினிகாந்த். கருப்பு நிறம், சாதாரண உடல்வாகு, பரட்டைத் தலை என திரையில் தோன்றிய ரஜினியை, பார்த்த முதல் கணமே, தமிழ் ரசிகர்கள் தனக்கானவராக அவரை வரித்துக் கொண்டனர். முதல் படத்தில் கேட்டை திறக்கும் சாதாரண செயலை, ரஜினிகாந்த் தனக்கே உரிய பாணியில் செய்தபோது அக்காட்சிக்கு உயிர் கிடைத்தது.
ரஜினியின் நக்கல் கலந்த வில்லத்தனமான சிரிப்பு, அவரது வில்லன் கதாபாத்திரத்தை தாண்டி ரசிகர்களை வியக்கவைத்தது. வில்லனாக இருந்தபோதே வியக்க வைத்தவர், நாயகனாக மாறியதும் சும்மா விடுவாரா. தலையை கோதுவதில் தொடங்கி, சிகரெட்டை தூக்கி போட்டு துப்பாக்கியால் பற்ற வைத்து பிடிப்பது, தனித்துவ ஸ்டைல்களால் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தார்.
சாதாரண வசனங்களையும், பஞ்ச் டயலாக்காக மாற்றியவர் ரஜினிகாந்த். தனது காந்தப் பார்வையோடு, அதற்கு ஏற்ற உடல் மொழியோடு ரஜினி பேசிய பல வசனங்களை, அவரது ரசிகர்கள் வாழ்க்கைத் தத்துவங்களாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். ரஜினியின் ஸ்டைலில் அவரது ஆடைகளும் முக்கியப் பங்காற்றின. டீ ஷர்ட்டுக்கு மேல் சட்டை, வித்தியாசமான பாக்கெட் கொண்ட பேண்ட்கள், நீளமான கோட் என ரஜினி எந்த ஆடை அணிந்தாலும் அது தான் அப்போதைய டிரெண்ட்.
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினி, காலத்திற்கு ஏற்ப தனது ஸ்டைலையும் அப்டேட் செய்துள்ளார். அதனால் தான், ஆறில் இருந்து அறுபது வயதானவர்களும், கூலி முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரஜினியை கொண்டாடி வருகின்றனர்.