2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்? தோனிக்கு உள்ள உடல் பாதிப்பு

12 ஆவணி 2025 செவ்வாய் 11:05 | பார்வைகள் : 118
2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்த கேள்விக்கு தனது உடல் பாதிப்பை குறிப்பிட்டு தோனி பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான எம்.எஸ்.தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
2008 ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால், ரூ.9.5 கோடிக்கு வாங்கப்பட்ட தோனி அந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார்.
CSK அணியின் அணித்தலைவராக செயல்பட்டு வந்த தோனி, அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்து அதிக ஐபிஎல் கோப்பையை வென்ற அணித்தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில், சென்னை அணி 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று, முதல் முறையாக புள்ளிபட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது.
ஏற்கனவே தோனிக்கு 43 வயதாகி விட்ட நிலையில், இந்த தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், தோனி ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை.
சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில், 2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "விளையாடுவேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது. அது குறித்து இறுதி முடிவெடுக்க டிசம்பர் வரை கால அவகாசம் உள்ளது" என தெரிவித்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் "நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்" என கூறியதற்கு, "என் முழங்கால் வலியை அதை யார் கவனிப்பது?" என சிரித்துக் கொண்டே கூறினார்.
இதனால் தோனி, அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதிப்படுத்தாத ஒன்றாக உள்ளது.
அதேவேளையில், முன்னர் ஒருமுறை இது குறித்து பேசிய அவர், நான் விலடியாடினாலும், விளையாடாவிட்டாலும் மஞ்சள் நிற ஜெர்சியில் தான் இருப்பேன் என கூறினார். இதனால், அவர் அடுத்த தொடரில் விளையாடாவிட்டால் பயிற்சியாளராக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.