Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அன்புமணியே தலைவர் !: பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்

அன்புமணியே தலைவர் !: பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்

10 ஆவணி 2025 ஞாயிறு 09:11 | பார்வைகள் : 3171


பா.ம.க., தலைவராக, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியே தொடர்வார்' என, அக்கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும், ஓராண்டுக்கு பிறகே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், அதுவரை இப்போதுள்ள நிர்வாகிகளே நீடிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுக்குழு மேடையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்காக போடப்பட்ட நாற்காலி, கடைசி வரை காலியாகவே இருந்தது. ராமதாஸ் உடனான மோதல் முடிவுக்கு வராத நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில், மாமல்லபுரத்தில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடந்தது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க., தலைவர் அன்புமணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரின் செயல்பாடுகள் மீது, பா.ம.க., முழு நம்பிக்கை கொண்டுள்ளது

கட்சியின் அமைப்பு விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். வரும் 2026ல், சட்டசபை தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட வேண்டியிருக்கும். அதனால், உட்கட்சி தேர்தல் மேலும் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. 2026 ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படும்

அதுவரை, பா.ம.க., தலைவராக அன்புமணி, பொதுச்செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோர் தொடர்வர். இதற்கு, பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது தமிழகத்தில் அனைத்து தரப்பினராலும் வெறுக்கப்படும் கொடுங்கோல் தி.மு.க., அரசை, வரும் சட்டசபை தேர்தலில் வீழ்த்த பா.ம.க., உறுதியேற்கிறது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுத்தால், பா.ம.க., சார்பில் மக்களை திரட்டி, மிகப்பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெயர் கெட்டு விடும் பொதுக் குழுவில் அன்புமணி பேசியதாவது:

ராமதாஸ் ஒரு தேசிய தலைவர்; சமூக சீர்திருத்தவாதி. எங்களுக்கு அரசியலையும், சமூக நீதியையும் கற்றுக் கொடுத்தவர். ஆனால், இப்போது அவரால் கட்சியை நிர்வகிக்க முடியாத சூழல் இருக்கிறது. சில நேரங்களில் சுவாமிக்கு கொஞ்சம் கோபம் வந்து விடும். அப்போது திருவிழா நடத்துவோம்; காவடி எடுப்போம்.

இதில், பூசாரி தான் இடையில் பிரச்னை செய்வார். ராமதாசை சுற்றியுள்ள சில சுயநலவாதிகள், தீய சக்திகள், குள்ளநரி கூட்டம், பொய்களை சொல்லி சொல்லி அவரை ஏமாற்றுகின்றனர்.

நான் பிடிவாதக்காரன் அல்ல; உறுதியானவன். யாராவது வந்து பேசி சமாதானப்படுத்தினால் சமாதானமாகி விடுவேன்.

பல செய்திகளை என்னால் சொல்ல முடியாது; சொல்லவும் போவதில்லை. ஆனால், செய்ய வேண்டியதை செய்வேன். ராமதாசிடம், 40 முறை பேசி விட்டேன்; நேற்று கூட பேசினேன். நான் பேசினால், காலையில் சரி என்பார்; பின், பூசாரிகள் சொன்ன பின், அடுத்த நாள் இல்லை என்பார். ராமதாசின் மானம், மரியாதை தான் நமக்கு முக்கியம் .

மாம்பழம் சின்னம் ஒருதலைபட்சமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு பதில் சொல்லி கொண்டிருந்தால், ராமதாஸ் பெயர் கெட்டு விடும்.

நிர்வாகிகள் நியமனத்தில் இருவரும் இணைந்து கையெழுத்து போடுவோம் என்பதை, 15 நாட்களுக்கு முன் ஒப்புக் கொண்டார். அப்புறம், 'நான் மட்டுமே நியமிப்பேன்' என்று கூறி விட்டார்.

அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தலைவர் இருக்க முடியாது; நிறுவனர் தான் நிரந்தரம். பொதுக்குழு முடிவு செய்பவர் தான் தலைவர். வரும் 2026 சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு மாம்பழம் சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கிஉள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விரைவில் கூட்டணி தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரக் கூடாது; யார் வர வேண்டும் என, பா.ம.க.,வுக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. வன்னியர்கள், பட்டியலின மக்களின் துரோகி தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விரைவில் அறிவிப்போம். கட்சி நிர்வாகிகளின் விருப்பப் படியே கூட்டணி அமையும். - அன்புமணி, தலைவர், பா.ம.க.,

வர்த்தக‌ விளம்பரங்கள்