திருமண வாழ்க்கை இரகசியங்கள்..

9 ஆவணி 2025 சனி 17:32 | பார்வைகள் : 129
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கலாச்சாரங்களில் திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையேயான ஒரு உன்னதமான பந்தமாக கருதப்படுகிறது. இந்த ஆழமான பந்தம் என்பது நம்பிக்கை, நெருக்கம் மற்றும் இருவருக்கு இடையே மட்டுமே பகிரப்பட்ட உணர்வுகளால் கட்டப்பட்டது. நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் உங்களது வாழ்க்கை துணையை பற்றி பேசுவது எதார்த்தமான விஷயமாக இருந்தாலும் உங்களுடைய திருமணம் சம்பந்தமான ஒரு சில விஷயங்களை தம்பதியாகிய உங்கள் இருவருக்கு மட்டுமே ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத விதமாக நீங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் சில விஷயங்கள் உங்கள் இருவருக்கும் இடையேயான பந்தத்தை சேதப்படுத்தலாம். எனவே எந்தெந்த திருமண சார்ந்த ரகசியங்களை பிறரிடம் வெளிப்படுத்தக் கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் வாழ்க்கை துணையின் தவறுகள் அல்லது வீக்னஸ்: ஒவ்வொரு நபருக்குமே ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். ஆனால் உங்களுடைய வாழ்க்கை துணை எந்தெந்த விஷயத்திற்கு பயப்படுவார்கள், அவர்கள் செய்த தவறுகள் மற்றும் அவர்களுடைய வீக்னஸ் பற்றி நீங்கள் பிறரிடம் பேசும் போது அது உங்களுடைய வாழ்க்கை துணைக்கு நீங்கள் செய்த ஒரு துரோகம் போல மாறிவிடுகிறது. இந்த தகவல்கள் அவர்கள் ஒரு நம்பிக்கையின் பெயரில் உங்களிடம் பகிர்ந்து கொண்டது. எனவே இதனை நீங்கள் பிறருடன் பகிர்ந்து கொள்வது இந்த நம்பிக்கையை உடைத்து விடும். இவ்வாறு செய்வது உணர்வு பூர்வமான பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை மீறுவதாக மனநல நிபுணர்கள் கருதுகின்றனர்.
உங்களுடைய வாக்குவாதங்கள் அல்லது சண்டைகள்: உங்களுடைய வாழ்க்கை துணையோடு ஒரு பிரச்சனை ஏற்பட்ட பிறகு அதனைப் பற்றி உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பேசும் போது உங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் அவ்வாறு செய்வது நல்லதை விட அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரும்பாலும் ஒரு பக்கமாக பேசி பிரச்சனையை பெரிதுபடுத்தலாம் அல்லது உங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை தீர்ந்து விட்டாலும் கூட அவர்கள் இதனை மனதில் வைத்துக் கொண்டு ஒரு சில விஷயங்களை செய்யலாம். ஆகையால் உங்களுடைய துணையை பற்றி பிறரிடம் ஒருபோதும் குறை கூறாதீர்கள். உங்களுக்குள் நடக்கும் வாக்குவாதங்கள் அல்லது சண்டைகளை எப்பொழுதும் ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது.
உங்கள் வாழ்க்கை துணையின் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விவரங்கள்: பெரும்பாலான திருமணங்களில் பணம் என்பது ஒரு சென்சிடிவான பிரச்சனையாக அமைகிறது. உங்களுடைய வாழ்க்கை துணையின் வருமானம், கடன்கள், செலவு செய்யும் பழக்கங்கள் அல்லது பொருளாதார பிரச்சனைகளை பிறரிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் போது அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். இதனால் நம்பிக்கை உடையும் மற்றும் அவர்கள் மீதான மரியாதை பறிபோனதாக கருதுவார்கள். எனவே பொருளாதார ரீதியாக வெளிப்படையாக இருப்பது தம்பதியினருக்கு இடையே மட்டுமே தவிர வெளியில் கிடையாது.
நம்பிக்கையின் பெயரில் அவர்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்ட ரகசியங்கள்: உங்களுடைய துணை உங்களிடம் கூறிய ஒரு ரகசியத்தையோ அல்லது தங்களுடைய கடந்த காலம், குடும்பம், ஆரோக்கியம் அல்லது கனவுகள் பற்றிய தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கூறியிருந்தால் அது அவர் உங்கள் மீது வைத்திருக்கக் கூடிய உணர்வு ரீதியான நம்பிக்கையாகும். இந்த ரகசியங்களை எதார்த்தமாக கூட பிறரிடம் பகிர வேண்டாம். அவ்வாறு செய்தால் இது நீங்கள் அவர்களுக்கு செய்த துரோகம் மற்றும் இது அவர்களை காயப்படுத்தும். அவர்களுடைய நம்பிக்கைக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும். எனவே அவர்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்ட எந்த ஒரு விஷயத்தையும் பிறரிடம் எதார்த்தமாக கூட சொல்லி விட வேண்டாம்.
படுக்கையறை சம்பந்தப்பட்ட விஷயங்கள்: படுக்கையறை சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்பது மிகவும் உன்னதமானது மற்றும் ஒரு திருமணத்தின் ஆழமான தனிப்பட்ட விஷயமாக கருதப்படுகிறது. எனவே இது சம்பந்தமான விஷயங்களை நீங்கள் ஒரு கேலியாக கூட பிறரிடம் சொல்லக்கூடாது. இது உங்களுடைய துணையை ஆழமாக காயப்படுத்தும் மற்றும் அவர் உங்கள் மீது வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையை உடைத்து விடும். அதுமட்டுமல்லாமல் இதனால் தேவையில்லாமல் பிறர் உங்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வரலாம் அல்லது புரளிகள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே உங்களுடைய துணையின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மரியாதை கொடுத்து இது போன்றவற்றை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1