ராகுலை போல பொய் பேசாதீங்க; எம்.பி.,க்களுக்கு பிரதமர் அறிவுரை

6 ஆவணி 2025 புதன் 09:02 | பார்வைகள் : 139
ராகுலை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. இது நமக்கு ஒரு பாடம். அவரை போல ஒருபோதும் பொய் பேச வேண்டாம் என, தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறினார், என, பார்லி., விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், டில்லியில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களின் கூட்டம் நடந்தது.
இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.
'ஆப்பரேஷன் சிந்துார், ஆப்பரேஷன் மஹாதேவ்' நடவடிக்கைகளுக்கு, ஆயுதப் படைகளை பாராட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்.பி.,க்களிடையே பேசிய பிரதமர் மோடி, தே.ஜ., கூட்டணியின் எதிர் கால திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
கூட்டத்துக்கு பின், நிருபர்களிடம் பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகாரத் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு கூறியதாவது:
'ராகுல் எப்போதும் தவறான தகவல்களையே தெரிவித்து வருகிறார். உச்ச நீதிமன்றம் கூட அதை கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
'இது நமக்கு ஒரு பாடம். ராகுலை போல ஒருபோதும் பொய் பேச வேண்டாம்' என, பிரதமர் மோடி எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி மூன்று வாரங்கள் ஆகியுள்ளன. ஆனால் ஒரு மசோதா கூட நிறைவேற்றப்படவில்லை.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியே இதற்கு காரணம். ராஜ்ய சபாவில் சபைக் காவலர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
பாதுகாப்பு படையினர் இருப்பதாக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுவது முற்றிலும் பொய்.
சட்டசபையில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, லோக்சபாவில் அறிமுகம் செய்வோம். பார்லி., சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ராகுலை விமர்சித்தது தேவையற்றது: இண்டி
இந்திய எல்லையில் மிகப்பெரிய ஒரு பகுதியை, சீனா ஆக்கிரமித்து விட்டதாக காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், 'ஓர் இந்தியர் இப்படி பேச மாட்டார்' என, குறிப்பிட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், 'நாட்டின் நலன் சார்ந்த பிரச்னைகளில் கருத்து தெரிவிப்பது, அரசியல் கட்சிகளின் பொறுப்பு. குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவருக்கு அந்த பொறுப்பு கூடுதலாக உள்ளது. அரசை கேள்வி கேட்பது தான், ராகுலின் பொறுப்பு. அதைத் தான் அவரும் செய்கிறார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராகுலை விமர்சித்தது, அசாதாரணமானது; தேவையற்றது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025